மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு: இரு நாள்களில் நீர் மட்டம் 19 அடி உயர்வு

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. 
 இதனால் கபினி அணையின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.  கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக,  காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,25,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  
 அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  வெள்ளிக்கிழமை காலை 54.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு  73.60 அடியாக உயர்ந்தது.  கடந்த இரு நாள்களில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 19.10 அடி உயர்ந்துள்ளது.  அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 35.87 டி.எம்.சி.  அணைக்கு வரும் நீரின் அளவு இதே அளவில் இருந்தால்,  ஒரு வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பும்.  இதனால் விரைவில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும். 
         மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  மேட்டூர் நீர் தேக்கம் பகுதியில் உள்ள செட்டிப்பட்டி, ஏமனூர், கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை பரிசல்துறைகளில் படகுகள் இயக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத் துறை அறிவித்துள்ளதால்,  இரண்டாவது நாளாக மீனவர்கள் காவிரியில் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 
அணையின் நீர் மட்டம் 73.60 அடியைத் தாண்டியால் மேட்டூர் நீர் தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த ஜலகண்டேசுவரர் ஆலயமும் அதன் முகப்பில் உள்ள நந்தி சிலையும் மீண்டும் நீரில் மூழ்கின. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால்,  மேட்டூர் அணையின் வலதுகரையிலும், இடது கரையிலும் பெதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.       காவிரி கரையில் வெள்ள அபாயம் உள்ளதால்,  வருவாய்த் துறை ஊழியர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  
 தொடர்ந்து 3 நாள்கள் அரசு விடுமுறை  என்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதைக் காண தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மேட்டூருக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர்.  இதனால் மேட்டூர்-மைசூரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com