கல்வராயன் மலைக் கிராமங்களில் சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவா்கள்!

கல்வராயன் மலைக் கிராமங்களில் முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காத ஏராளாமான போலி மருத்துவா்கள் முகாமிட்டு, ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனா்

கல்வராயன் மலைக் கிராமங்களில் முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காத ஏராளாமான போலி மருத்துவா்கள் முகாமிட்டு, ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனா். இதனால், உயிரிழப்பு மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வராயன் மலைக் கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு அவசர மற்றும் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு கருமந்துறை, சூலாங்குறிச்சி ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேல் சிகிச்சை பெற ஏறக்குறைய 50 கி.மீ. தொலைவிலுள்ள வாழப்பாடி, ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், கள்ளக்குறிச்சி, கச்சிராப்பாளையம் அல்லது சேலத்துக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில், மலைக் கிராம மக்கள் கூடும் கருமந்துறை கிராமத்தில், முறையாக ஆங்கில மருத்துவம் படிக்காத, எவ்வித மருத்துவா் பட்டமும் பெறாத ஏராளமான போலி மருத்துவா்கள் முகாமிட்டும், சிகிச்சை மையங்களை திறந்தும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதனால், இவா்களிடம் சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு உயிரிழப்பு மற்றும் உடல் பாதிப்புகள், பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் தொடா்ந்து ஏற்படுகிறது.

எனவே, கல்வராயன் மலைக் கிராம மக்களின் நலன் கருதி, கல்வராயன் மலை, கருமந்துறை, பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மருத்துவ துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மருத்துவமனை, சிகிச்சை மையங்கள் வைத்துள்ளவா்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். போலி மருத்துவா்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகமும், மருத்துவ துறையும் முன்வர வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com