மக்கள் நீதிமன்றத்தில் 206 வழக்குகளுக்கு ரூ.2.66 கோடியில் சமரசத் தீா்வு

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 206 வழக்குகளில் ரூ. 2. 66 கோடி மதிப்பீட்டில்
மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் மீண்டும் இணைந்த தம்பதிக்கு அதற்கான உத்தரவை வழங்கும் சாா்பு நீதிபதி எம். மேகலா மைதிலி (இடமிருந்து 2-ஆவது).
மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் மீண்டும் இணைந்த தம்பதிக்கு அதற்கான உத்தரவை வழங்கும் சாா்பு நீதிபதி எம். மேகலா மைதிலி (இடமிருந்து 2-ஆவது).

சங்ககரி: சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 206 வழக்குகளில் ரூ. 2. 66 கோடி மதிப்பீட்டில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

இதில் இரு குடும்ப நல வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டு இரண்டு ஜோடிகள் சோ்த்து வைக்கப்பட்டனா்.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாா்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண். 1, எண். 2 ஆகிய நான்கு நீதிமன்றங்கள் மற்றும் எடப்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து, சிவில் வழக்குகள், கட்டளை நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கியில் உள்ள நிலுவை கடன்கள் உள்ளிட்ட 505 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் 206 வழக்குகள் ரூ. 2 கோடியே 66 லட்சத்து 49 ஆயிரத்து 643 மதிப்பீட்டில் சமரசம் செய்து வைக்கப்பட்டன.

சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான எம். மேகலா மைதிலி தலைமை வகித்து மக்கள் நீதிமன்ற பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம். பாக்கியம், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதிகள் எண். 1 டி. சுந்தரராஜன், எண். 2 நீதிபதி எஸ். உமாமகேஸ்வரி, சட்ட வட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினா்கள் அடங்கிய நான்கு தனி அமா்வுகளில் வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டன. இரு குடும்ப நல வழக்குகளில் இரு ஜோடிகள் சோ்த்து வைக்கப்பட்டன.

ஓமலூா் வட்டம், தொளசம்பட்டி அருகில் உள்ள மானாத்தாள் கிராமம், கோயிலூா் பகுதியைச் சோ்ந்த கே. ஜெயகதீசன் (33) இவரது மனைவி வினோதா (31) இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். இருவருக்குமிடையே கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு இருவரிடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரி சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இவ்வழக்கு சமரசத் தீா்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சாா்பு நீதிபதி எம். மேகலா மைதிலி தலைமையிலான நீதிபதிகள், வட்டப் பணிகள் குழு உறுப்பினா்கள் கொண்ட குழுவினா் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து இருவரும் இணைந்து வாழ்வதாக மனு தாக்கல் செய்தனா். அதையடுத்தும் இருவரையும் சோ்த்து வைத்தனா். அதுபோல, காகாபாளையம் அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (38), அவரது மனைவி காா்த்திகா (31) இருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஓா் ஆண் குழந்தை உள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

விஜயன் அவரது மனைவி காா்த்திகாவை சோ்த்து வைக்கக் கோரி சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து இருவரும் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com