வீட்டுத் தோட்டங்களில் மூலிகைச் செடிகள் வளர்ப்புத் திட்டம்: வனத்துறை வாயிலாக மலைக் கிராமங்களுக்கு 2,000 செடிகள் வழங்கல்

மூலிகைச் செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் திட்டத்தின் கீழ் வாழப்பாடி வனத்துறை வாயிலாக 2,000 மூலிகைச் செடிகளை

மூலிகைச் செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் திட்டத்தின் கீழ் வாழப்பாடி வனத்துறை வாயிலாக 2,000 மூலிகைச் செடிகளை உற்பத்தி செய்து மலைக் கிராம மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
 தமிழகத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி திட்டத்தின் கீழ், வனப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு காடு வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்திய வனத்துறை, தமிழ்நாடு பல்லுயிர் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், தனியார் பட்டா நிலங்களில் வனத்துறை வாயிலாக மரம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தியது.
 இத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பட்டா நிலத்தில் வனத்துறையே மரக்கன்றுகளை நடவு செய்து கொடுப்பதோடு, நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் நில உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும், முதிர்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்து கொள்ளும் உரிமையும் வழங்கி வருகிறது.
 இதையடுத்து அருகிவரும் அருமருந்தாகும் மூலிகைச் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கும் திட்டத்தையும் இரு ஆண்டுகளுக்கு முன் வனத்துறை செயல்படுத்தியது.
 இத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு வாழப்பாடி வனச் சரகத்தில் புழுதிக்குட்டை கிராமத்தில் நாற்றங்கால் அமைத்து எலுமிச்சை, கறிவேப்பிலை, மருதாணி, ஆடாதோடா, கற்பூரவல்லி, துளசி, நித்தியக் கல்யாணி, தூதுவலை, செம்பருத்தி ஆகிய 2,000 மூலிகைச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
 வாழப்பாடி அருகே அருநுôற்றுமலை அடிவாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய புழுதிக்குட்டை, புங்கமடுவு, கிலாக்காடு ஆகிய மலைக் கிராமங்களைத் தேர்வு செய்து மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு மூலிகைச் செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
 சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தலைமையில், வாழப்பாடி வனச்சரகர் பரமசிவம், வனவர் குமரேசன், வனக்காப்பாளர் சேகர் ஆகியோர் மூலிகைச் செடிகளை வழங்கினர்.
 வனத்துறை வாயிலாக இலவசமாக வழங்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து, இதன்மூலம் கிடைக்கும் வருவாயை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தங்களது மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com