பள்ளிகளில் தீவிர தொழுநோய் பரிசோதனைகள் தொடக்கம்

சேலத்தில் அனைத்து நகர மற்றும் கிராமப் பகுதியிலும், பள்ளிகளிலும்  தீவிர தொழுநோய்

சேலத்தில் அனைத்து நகர மற்றும் கிராமப் பகுதியிலும், பள்ளிகளிலும்  தீவிர தொழுநோய் பரிசோதனைகள் திங்கள்கிழமை தொடங்கியதாக துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) மருத்துவர் ஆ.க. குமுதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 10-ஆம் தேதிக்கு முன்னதாக, தொழுநோயின் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டு ஊனத்தோடு வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை 1 மில்லியன் மக்கள் தொகைக்கு ஒன்றுக்கும் குறைவு எனும் இலக்கை அடையும் நோக்கோடு அக்டோபர் 2018-முதல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில்  மாவட்டத்தின் அனைத்து நகர மற்றும் கிராம பகுதிகளிலும், பள்ளிகளிலும்  தீவிர தொழுநோய் பரிசோதனை, விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்புப் பணிகள், தோல் சிகிச்சை முகாம்கள் உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை (ஜூலை 8) தொடங்கின. மேலும் இந்தப் பணிகள் வரும் ஜூலை 24- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. சிவந்த அல்லது  வெளிறிய, அரிப்பில்லாத உணர்ச்சியற்ற தேமல்கள், உள்ளங்கை, கால்களில்
உணர்ச்சியற்ற தன்மை, மரத்துப் போன தன்மை, தோலில் எண்ணெய் பூசியது போன்று மினுமினுப்பு, காதின் மடல்கள் சிறுசிறு மணிகள்போல் தடித்திருத்தல், கை, கால்களில் ஆறாத,  நாள்பட்ட புண்கள், கை, கால் விரல்கள் மடங்கி இருத்தல், கண் இமைகளை மூட முடியாத நிலை, மணிக்கட்டு, கணுக்கால் துவண்டு இருத்தல் போன்று ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களை தேடி வரும் மருத்துவ குழுக்கள் மற்றும் பணியாளர்களிடம் பரிசோதனை செய்து கொண்டு பயனடையலாம் என சேலம் மாவட்ட துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) மருத்துவர் ஆ.க.குமுதா
தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com