"மொழிசார் புலமை பெற வாழ்நாளில் நூறு புத்தகங்களையாவது படிக்க வேண்டும்'

மொழிசார் புலமை பெற வாழ்நாளில் குறைந்தபட்சம்  நூறு புத்தகங்களையாவது மாணவர்கள் படிக்க வேண்டும்

மொழிசார் புலமை பெற வாழ்நாளில் குறைந்தபட்சம்  நூறு புத்தகங்களையாவது மாணவர்கள் படிக்க வேண்டும் என பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் என்.கிருஷ்ணசாமி மற்றும் பேராசிரியர் லலிதா கிருஷ்ணசாமி அறக்கட்டளை சார்பில் புதன்கிழமை சொற்பொழிவு நடைபெற்றது. ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் வி.சங்கீதா வரவேற்றார். 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணை வேந்தர் பொ.குழந்தைவேல் பேசியது: நம் பாரம்பரியம் எந்த அளவுக்கு தொன்மை வாய்ந்தது என்பதை நம்முடைய இலக்கியங்கள் தெளிவாக விளக்குகின்றன.
ஏனைய மற்ற பாரம்பரியங்களை விட தமிழ்ப் பாரம்பரியத்தின் பழமை மற்றும் தொன்மையை இளைஞர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக மற்ற மொழிகளையும் மாணவர்கள் கற்றுத் தேற வேண்டும். 20 வயதுக்குள் பல்வேறு மொழிகளையும் எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்பதால், மாணவர்கள் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியின் சிறப்புகளை பிற மொழிக்கு மொழிபெயர்க்க முடியும்.
மொழிசார் புலமை பெற, அந்த மொழி சார்ந்த குறைந்தபட்சம் நூறு நூல்களையாவது மாணவர்கள் படிக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் மொழியாள்கை திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பேச்சு மற்றும் எழுத்து நடையை சிறப்பாக்க மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பயிற்சியளிக்கப்படும் என்றார் அவர்.
சொற்பொழிவை தொடங்கி வைத்து ஹைதராபாத் பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் அயல்மொழித் துறையின் முன்னாள் பேராசிரியர் என்.கிருஷ்ணசாமி பேசுகையில், மாணவர்கள் நம்முடைய பண்பாட்டை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் இலக்கியங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். தாங்கள் அறிந்து கொண்டதை வெகு மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உண்டு என்பதை உணர்ந்து மாணவர்கள் செயலாற்ற வேண்டும் என்றார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் ஹெச்.கல்பனா ராவ் உலக இலக்கியங்களில் பாரம்பரிய பனுவல்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். உதவிப் பேராசிரியர் கே.சிந்து நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com