கோதுமலை அடிவாரக் கிராமத்தில் ஆடுகளை வேட்டையாடும் மர்ம விலங்கு
By DIN | Published On : 09th June 2019 04:37 AM | Last Updated : 09th June 2019 04:37 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரக் கிராமங்களில் மர்ம விலங்குகள் புகுந்து ஆடுகளை வேட்டையாடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, அந்த மர்ம விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் ஆடு, கறவைமாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஜனவரி முதல் வாரத்தில் வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் தொழிற்பயிற்சி மையத்துக்கு பின்பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வளர்த்து வந்த ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துத் தின்றன.
கடந்த மே 27-ஆம் தேதி குமாரசாமியூர் கிராமத்துக்குள் புகுந்த மர்ம விலங்கு, விவசாயி சங்கர் என்பவர் வளர்த்து வரும் ஆட்டுக்குட்டியை கடித்துத் தின்றது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக குமாரசாமியூர் கிராமத்தில் இரவு நேரத்தில் மீண்டும் மர்ம விலங்குகள் உலவி வருகின்றன. கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தக் கிராமத்தை சேர்ந்த எம்ஜிஆர், பழனிசாமி, ராஜேந்திரன், சின்னதம்பி உள்ளிட்ட விவசாயிகள் வளர்த்து வரும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்குகள் வேட்டையாடி தின்று விட்டன.
இதனால் பீதியடைந்த கோதுமலை அடிவாரக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆடுகளை வேட்டையாடி வரும் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டுமென, வாழப்பாடி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாழப்பாடி வனச்சரகர் ஞானராஜ் கூறியதாவது: மர்மவிலங்கை கண்டறிந்து பிடிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.