"பயறு வகை விதைப் பண்ணைகள் அமைத்து கூடுதல் லாபம் பெறலாம்'

பயறு வகை விதைப் பண்ணைகள் அமைத்து, கூடுதல் லாபம் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை தெரிவித்தார். 

பயறு வகை விதைப் பண்ணைகள் அமைத்து, கூடுதல் லாபம் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயறு வகை விதைப் பண்ணைகளில் விதைப்பு செய்து 40 நாள்களில் பூப்பருவத்தின் போது ஒரு முறையும், விதைப்பு செய்து 55 நாள்களில் காய் முதிர்வு நிலையில் ஒரு முறையும் அந்தந்தப் பகுதி விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்படும். பின்னர் பயிர் விலகு தூரம், கலவன் கணக்கீடு, குறித்தறிவிக்கப்பட்ட நோய் தாக்கிய பயிர்களின் கணக்கீடு போன்ற காரணிகள் கணக்கீடு செய்யப்பட்டு  ஆய்வறிக்கைகள் வழங்கப்படும்.
பயிர் விலகு தூரம் ஆதார நிலைக்கு 10 மீட்டருக்கும், சான்று நிலைக்கு 5 மீட்டருக்கும் குறையாமலும் இருக்குமாறு விதைப் பண்ணைகள் பராமரிக்கப்பட வேண்டும். விதைப் பண்ணை வயல்கள் கலவன்கள் இன்றி பராமரிக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாகும். 
புறத்தோற்றத்திலும், குணாதிசயத்தாலும் மாறுபட்டுள்ள பிற ரக மற்றும் இதர செடிகளை அப்புறப்படுத்தவும், நோய் தாக்கிய செடிகளை அப்புறப்படுத்தவும் விதைச்சான்று அலுவலரின் அறிவுரையை பின்பற்றி பிற ரக கலவன்கள் இல்லாமல் விதைப் பண்ணைகளை பராமரிக்க வேண்டும். பிற ரக கலவன்கள் பயறுவகை பயிர்களில் சான்று நிலை விதைப் பண்ணையாக இருந்தால் 0.2 சதவீதமும், ஆதாரநிலை விதைப் பண்ணையாக இருந்தால் 0.1 சதவீதமும் மட்டுமே அனுமதிக்க இயலும். இந்த அளவினை விட அதிகமாக இருப்பின் விதைப் பண்ணைகள் தள்ளுபடிக்கு பரிந்துரைக்கப்படும். 
அறுவடைநிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின் பிற ரக கலப்பு இல்லாமல் அறுவடை செய்த விதைகளை 9 சதவீத ஈரப்பதம் வரும் வரையில் நன்கு உலர்த்தி சுத்தம் செய்து, தரமான விதைகளை சாக்குப்பைகளில் நிரப்பி, சுத்தி அறிக்கை பெற வேண்டும். பின் அறுவடை நிலை ஆய்விலிருந்து 90 நாள்களுக்குள் அறுவடை செய்யப்பட்ட விதையினை விதை சுத்தி நிலையம் கொண்டு செல்ல வேண்டும். 
விதை சுத்தி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்ட 90 நாள்களுக்குள் சுத்தி செய்து, விதை மாதிரி எடுத்து, பரிசோதனை நிலையம் அனுப்பப்பட்டு, விதை மாதிரி தரமானது என்று சான்றளிக்கப்பட்டால், அவ்விதை குவியலுக்கு விதை பகுப்பாய்வு நாளிலிருந்து 2 மாதத்துக்குள் சான்றட்டை பொருத்தப்பட வேண்டும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் சான்று விதைகளுக்கு வேளாண் துறையின் விதை உற்பத்தி மானியம் கிடைப்பதால், அதிக மகசூலுடன் கூடுதல் லாபம் பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com