மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல்
By DIN | Published On : 24th June 2019 10:06 AM | Last Updated : 24th June 2019 10:06 AM | அ+அ அ- |

மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு நேர்காணல் இம் மாதம் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கு. இந்திராணி தெரிவித்தார். அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ஐடிஐ-யில் பயின்று எலக்ட்ரீசியன் மற்றும் வயர்மேன் பிரிவில் என்டிசி சான்றிதழ் பெற்ற மேட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் 46 பேருக்கு மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் பிரதி மாதம் ரூ. 7,709 உதவித்தொகையுடன் கூடிய ஓராண்டு தொழிற் பழகுநர் பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
அதற்கான நேர்காணல் எதிர்வரும் 28, 29 ஆம் தேதிகளில் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மேட்டூர் அணை மத்திய அலுவலகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
தகுதி உள்ளவர்கள் நேர்காணலுக்கு வரும்போது என்டிசி, ஐடிஐ மதிப்பெண் சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு சான்றொப்பமிட்ட நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு புகைப்படங்களுடன் நேர்காணலுக்கு வரலாம்.
ஏற்கெனவே தொழிற்பழகுநர் பயிற்சி நிறைவு செய்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கக் கூடாது. நேர்காணலில் பங்கேற்க எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் கு. இந்திராணி தெரிவித்தார்.