எடப்பாடி அருகே வங்கி அதிகாரி எனக் கூறி மோசடி: இளைஞரிடம் விசாரணை
By DIN | Published On : 04th March 2019 08:43 AM | Last Updated : 04th March 2019 08:43 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே வங்கி அதிகாரி எனக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே ஆரல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (எ) இருசக் கவுண்டர் மகன் சசிகுமார் (26). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சாலியூர் பகுதியில் முகாமிட்டு தான் தனியார் வங்கி அதிகாரி எனவும், இப் பகுதியில் உள்ள கிராம மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு சலுகைகளுடன் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி வங்கியில் பணிபுரிவது போன்ற புகைப்படங்களை அப்பகுதி மக்களிடம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
பாச்சாலியூர், ஆயமரத்துக்காடு, மோட்டூர், சனகுட்டிவளவு உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி மக்களிடம் தொடர்புகொண்ட சசிகுமார் அவர்களுக்கு தான் பணிபுரியும் வங்கியிலிருந்து சுயத் தொழில் கடன், தனிநபர் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன்வைப்புத் தொகையாக ரூ. 7ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை செலுத்த வேண்டும் எனக் கூறி பல லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டாராம்.
பணம் செலுத்தியவர்களுக்கு நீண்ட நாள்கள் ஆகியும் வங்கிக் கடன் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளையை அணுகி விசாரித்தபோது சசிகுமார் அங்கு பணிபுரியவில்லை என்ற உண்மை தெரியவந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களிடம் முன்வைப்பு தொகை பெறுவதற்காக பாச்சாலியூர் வந்த சசிகுமாரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப் பகுதியைச் சேர்ந்த சுமார் 112 நபர்களிடம் சசிகுமார் மோசடி செய்து பணம் பெற்றதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீஸார் சசிகுமாரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.