3 மாத ஆண் குழந்தை கொலை: தந்தை-பாட்டி கைது

வாழப்பாடி அருகே மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தந்தையையும், பாட்டியையும்

வாழப்பாடி அருகே மனைவி மீது உள்ள கோபத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தந்தையையும், பாட்டியையும் வாழப்பாடி போலீஸார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி பூமலை (55). இவரது மகன் கேசவன் (33). தனியார் பால் பண்ணையில் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும் கோலாத்துக்கோம்பை புதூர் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிப் பெண் அபிராமி (27). என்பவருக்கும் 2018 பிப்ரவரியில் திருமணம் முடிந்தது. 
அபிராமி, ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதால், தம்பதிக்கிடையே  இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இத் தம்பதிக்கு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்காக தாய் வீட்டுக்குச் சென்ற அபிராமி, குழந்தை பிறந்ததும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல்,  பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தாயார் லட்சுமி பூமலை,  உறவினர்கள் சிலருடன் அபிராமியின் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கேசவன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அபிராமி கணவருடன் வர மறுத்ததால் ஆவேசமடைந்த கேசவனும், லட்சுமியும் 3 மாத ஆண் குழந்தையை இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்றனர். 
இதுகுறித்து அபிராமி வாழப்பாடி போலீஸில் ஞாயிற்றுக்
கிழமை புகார் அளித்தார்.
அதன்பேரில் இருவரையும் பிடித்த போலீஸார் குழந்தை இறந்தது கண்டு விசாரணை நடத்தினர்.
சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில்,  கேசவனும், அவரது தாயார் லட்சுமி பூமலையும் குழந்தையை தூக்கிச் சென்று சேசன்சாவடி மைத்ரா ஸ்டேஷன் அருகே குழந்தையை மூச்சை அடைத்து கொலை செய்ததும், அதற்கு லட்சுமி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து இருவரையும் கைது செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார், வாழப்பாடி நீதித்துறை குற்றவியல் நடுவர் மன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com