ஆம்னி பேருந்தில் 13 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 05:20 AM | Last Updated : 24th March 2019 05:20 AM | அ+அ அ- |

சென்னை சென்ற ஆம்னி பேருந்தில் 13 கிலோ வெள்ளிப் பொருள்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி முதல் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும்படை, 33 நிலை கண்காணிப்புக் குழுவினர் தவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் தெற்கு தொகுதிக்குள்பட்ட தாதகாப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு உதவி ஆணையர்கள் கவிதா, சுந்தரராஜன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த சேலம்-சென்னை ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், ஒரு பண்டல்களில் 13 கிலோ வெள்ளி கொலுசுப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. செவ்வாய்ப்பேட்டை அப்புசெட்டி தெருவைச் சேர்ந்த சைலேந்திரசிங் என்பவர் பார்சலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து சைலேந்திரசிங்கிற்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், வெள்ளிப் பொருள்களை உரிய ஆவணங்களின்றி அனுப்பியது தெரிந்தது. இதையடுத்து ரூ. 5.40 லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளியைப் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.