குழந்தையைத் தூக்கிச் சென்றதாகப் புகார்: பெண்ணிடம் போலீஸார் விசாரணை
By DIN | Published On : 15th May 2019 08:50 AM | Last Updated : 15th May 2019 08:50 AM | அ+அ அ- |

சேலத்தில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடியதாக பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
சேலம் மணக்காடு ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மனைவி மீனாட்சி. இந்தத் தம்பதிக்கு சரவணன் (3), நிவேதிதா (9) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை குழந்தை சரவணன் வீட்டுக்கு முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் 40 வயதுமிக்க பெண் ஒருவர் திடீரென சரவணனை தூக்கி சென்றதாகக் கூறப்படுகிறது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து பெண்ணை துரத்தி பிடித்தனர். பின்னர், குழந்தையை மீட்டு
பெற்றோரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
தகவலறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடனே விரைந்து வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு அழைத்து சென்றனர். அப்போது அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.