வேம்பனேரி அய்யனாரப்பன் ஆலயத் திருவிழாவையொட்டி கால்நடை கண்காட்சி

எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரி அய்யனாரப்பன் ஆலயத் திருவிழாவையொட்டி, வேம்பனேரி பகுதியில்

எடப்பாடி அருகே உள்ள வேம்பனேரி அய்யனாரப்பன் ஆலயத் திருவிழாவையொட்டி, வேம்பனேரி பகுதியில் கால்நடை கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒரு வாரத்துக்கு நடைபெறுகிறது. இதில், ஏராளமான குதிரைகள், ஜல்லிக்கட்டு காளைகள், கறவை மாடுகள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் பங்கேற்றன.
எடப்பாடியை அடுத்த வேம்பனேரி பகுதியில் பிரசித்திபெற்ற அய்யனாரப்பன் கோயில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் மே மாதத்தில் நடைபெறும் இவ்வாலயத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.  அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் கூடும் இத் திருவிழாவில், அனைவரையும் கவரும் வண்ணம் கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம்.
 நிகழாண்டில் நடைபெற்று வரும் இக் கண்காட்சியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு கால்நடைகள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டன. மேலும் ஆந்திரம், கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய இனப் பசுக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கால்நடை கண்காட்சியின் ஒருபகுதியாக நாட்டியக் குதிரை,  பந்தயக் குதிரை,  வண்டிக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வகையான குதிரைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில்,  குதிரைகள் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையும், கறவை மாடுகள் ரூ.50ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சத்துக்கும் விற்பனையானதாக,  கண்காட்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.  நாட்டுரக பசு மாடுகள்,  வண்டி மாடுகள்,  ஏர் உழவுப் பணிக்கான ஜோடிகளை வாங்குவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டியதாக கால்நடை வியாபாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலம் மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் சங்க நிர்வாகி வெங்கடாசலம் கூறுகையில், வேம்பனேரி  கால்நடை கண்காட்சியில் கரியான், காங்கேயம், மயிலைக் காளை, செவலைக் காளை உள்ளிட்ட  பல்வேறு வகை ஜல்லிக்கட்டு காளைகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில்,  இப் பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அக் காளைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தார்.
வேம்பனேரியைச் சேர்ந்த விஜயலட்சுமி-விஜயகுமார் குழுவினர், கால்நடை வளர்த்தலில் உள்ள பல்வேறு நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இந் நிகழ்ச்சி குறித்து அதன் அமைப்பாளர்கள் கூறுகையில், விவசாய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடைபெறும் இக் கண்காட்சி தொடர்ந்து அடுத்த வாரம் வரை நடைபெறுவதாக கூறினர். 
 கண்காட்சியில் கால்நடைகள் மட்டுமின்றி  பல்வேறு நவீன உழவுக் கருவிகள் மற்றும் வேளாண் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com