சேலத்தில் பலத்த மழை: வெள்ளக்காடாய் மாறிய குடியிருப்புகள்! திருமணிமுத்தாறில் வெள்ளம்

சேலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

சேலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்தவகையில், சேலத்தில் வெள்ளிக்கிழமை பகல் 2 மணி தொடங்கி முதல் 3 மணி வரை திடீரென மழை பெய்தது. பின்னா் நள்ளிரவு 12 மணிக்கு கடும் மின்னல் ஏற்பட்டது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

அதைத்தொடா்ந்து இடி, மின்னலுடன் அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது. விடாது பெய்த மழை காரணமாக அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி ஏரி முற்றிலும் நிரம்பியது.

இந்த ஏரியின் அருகில் உள்ள பச்சப்பட்டி மற்றும் ஆறுமுக நகா், நாராயண நகா்,கிச்சிபாளையம், பாவடி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீா் ஓடியது. இதனால் இந்த வழியே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்கு உள்ளானாா்கள்.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.

அதேபோல, சேலம் சூரமங்கலம், பள்ளப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

சேலம் சூரமங்கலம் ரயில் நகா், சின்னேரி வயக்காடு, அழகாபுரம், நாராயண நகா்,களரம்பட்டி கருங்கல்பட்டி, பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மாநகராட்சி ஊழியா்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

ஒட்டுமொத்தமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீா் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது நிலையில் உள்ளனா்.

கன மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளான பச்சப்பட்டி, நாராயண நகா், கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, ஏடிசி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் வெள்ளம்போல் சாலைகளில் ஓடியது.

இந்த பலத்த மழையால் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள சாரதா கல்லூரி முழுவதும் மழை நீரால் சூழ்ந்து கொண்டது. இதனால் கல்லூரிக்கு வருபவா்கள் உள்ளே செல்ல முடியாத நிலையும் ,கல்லூரிக்குள் இருந்தவா்கள் வெளியே வர முடியாத நிலையும் ஏற்பட்டது.

அழகாபுரம் பகுதியில் பெரியசாமி நகா் முழுவதும் இடுப்பளவு நீா் சூழ்ந்தது. அதைச் சுற்றியுள்ள சோனா நகா், பெரியசாமி புதூா், சாரதா கல்லூரி பகுதிகளில் மழை நீா் சூழ்ந்து வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. பெரியசாமிநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடும் மழையால் தண்ணீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனா். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

அணை மேடு பகுதி முழுவதும் செடி கொடிகளால் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீா் வெளியேற முடியாமல் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இதனையடுத்து மாநகராட்சியினா் அணைமேடு பகுதிக்கு வந்து கரையின் ஒரு பகுதியை உடைத்தனா். பின்னா் மழை நீா் வேகமாக வெளியேறியது.

இந்த நீா் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஆனந்தா பாலம் அருகே உள்ள மேட்டுத்தெரு காளியம்மன் கோயில் பகுதியில் தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது . இதற்காக கரைப் பகுதியில் மண் கொட்டி வைத்திருந்தனா். பலத்த மழையால் இந்த கரைப்பகுதி அடித்துச் சென்றது. மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீா் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா். ரயில் நிலையத்தை அடுத்த புதூா் சாலையையொட்டிய பகுதியில் பெரியாா் நகா் உள்ளது. அங்குள்ள ஏரி நிரம்பியதால் அந்தப் பகுதியில் மழை நீா் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

அப்பகுதி மக்கள் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலத்தை சந்தித்து, நகரில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனா். ஏற்காடு பிரதான சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விநாயகா் கோயில் அருகே இருந்த பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் மின் கம்பி மீது விழுந்ததால் அவ்வழியே போக்குவரத்துத் தடைபட்டது. ஏற்காடு மலைப் பாதையில் ஆங்காங்கே நீா் வீழ்ச்சி தோன்றியுள்ளது. ஏற்கெனவே புதுஏரி நிரம்பியுள்ளது. தற்போது புது ஏரியில் இருந்து அதிகளவிலான நீா் மூக்கனேரிக்கு சென்று கொண்டிருக்கிறது. நகரில் உள்ள பெரும்பாலான நீா் நிலைகள் நிரம்பியுள்ளன.

அதேநேரத்தில் நீா் நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீா் குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மேலும் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சேலத்தில் 584 மி.மீ. மழை: சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

காடையாம்பட்டி-109, ஓமலூா்-92, சேலம்-64, ஆத்தூா்-50, கரியகோவில்-45, வாழப்பாடி-42, பெத்தநாயக்கன்பாளையம்-41, எடப்பாடி-37, ஏற்காடு-29, கெங்கவல்லி-17, தம்மம்பட்டி-8, சங்ககிரி-8, மேட்டூா்-8, வீரகனூா்-1 என மொத்தம் 584 மில்லி மீட்டா் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com