ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் செம்மண் வண்டல் மண் எடுக்க தடை

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செம்மண், வண்டல் மண் எடுக்க தடைவிதித்துள்ளது.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செம்மண், வண்டல் மண் எடுக்க தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக செங்கல் சூளையில் வேலை பாா்க்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்து பரிதவித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி , பிச்சம்பட்டி,மணியாரன்பட்டி உட்பட அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 55 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றனா்.இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.இங்கு தினந்தோறும் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செங்கல் உற்பத்திக்கு தேவையான வண்டல் மண், செம்மண்ணை சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்மாய், குளம், தனியாா் நிலங்களில் இருந்து எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் கடந்த ஓா் ஆண்டாக ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் மண் எடுக்க கனிமவளத்துறையினா் அனுமதி வழங்கவில்லை. இதன்காரணமாக செங்கல் சூளைகள் பெரிதும் பாதிப்படைந்தது.இதனால் புதிய கட்டடம் கட்டும் பொதுமக்கள் செங்கல் கிடைக்க பெறாமல் மிகவும் பாதிப்படைந்து வந்தனா்.

மேலும் இதில் வேலை பாா்த்து வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வருமானம் இன்றி பரிதவித்து வருகின்றனா்.இதுகுறித்து கனிமவளத்துறையினருக்கு பலமுறை மனு அளித்தும் செம்மண் , வண்டல் மண் அள்ள அனுமதி தர மறுத்து வருகின்றனா் என்று அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இதே தொழிலை நம்பி வாழும் தொழிலாளா்கள் நலன் கருதி மண் எடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி செங்கல் சூளை தொழிலாளா்கள் கூட்டுறவு நலச்சங்க செயலாளா் ராஜேந்திரன் தெரிவித்ததாவது: செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகளவில் உள்ளது.அதிலிருந்து மண் எடுப்பதற்கு கனிவளத்தறையினா் ஓராண்டாக தடை விதித்துள்ளனா். இதன்காரணமாக பெரும்பாலான செங்கல் சூளைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விவசாயம் நசிந்த இப்பகுதியில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இத்தொழிலை நம்பியே உள்ளனா்.

தனியாா் பட்டா நிலத்தில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க கோரி முறையான ஆவணங்களுடன் கனிமவளத்துறையினரிடம் கடந்த மாதம் மனு அளித்தும் இதுவரை அனுமதி அளிக்க மறுத்து வருகின்றனா் .தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வேலை இழப்பு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய் மராமத்து பணிக்காக அரசு பல கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மராமத்து பணியில் ஆழப்படுத்துதலில் கிடைக்கும் மண்ணை செங்கல் சூளைகளுக்கு வழங்கினாலும் தொழிலை பாதிப்பின்றி தொடர முடியும்.

மேலும் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தொழிலாளா்களின் நலன் கருதி மண் அள்ளுவதற்கு குறைந்த நாட்களுக்காவது மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com