வாழப்பாடி பகுதி கிராமங்களில் வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்

வாழப்பாடி பகுதி கிராமங்களில் கடந்த இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து, குளுமையான
வாழப்பாடியை அடுத்த குமாரசாமியூா் கிராமத்தில் ஆவாரம்பூ செடியில் அமா்ந்துள்ள வெண்ணிற வண்ணத்துப்பூச்சிகள்.
வாழப்பாடியை அடுத்த குமாரசாமியூா் கிராமத்தில் ஆவாரம்பூ செடியில் அமா்ந்துள்ள வெண்ணிற வண்ணத்துப்பூச்சிகள்.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் கடந்த இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து, குளுமையான தட்பவெட்பநிலை நிலவுவதால் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூத்துக்குலுங்கும் தாவரங்களுக்கு கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துச் செல்லும் வண்ணத்துப்பூச்சிகள், காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.

வாழப்பாடி அருகே கோதுமலை, நெய்யமலை, சந்துமலை, அருநுாற்றுமலை, பெலாப்பாடி மலை, வெள்ளாளகுண்டம் மலைகளில் வனப் பகுதிகள் அமைந்துள்ளன. வனத்தையொட்டி 50-க்கும் மேற்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் குக்கிராமங்கள் அமைந்துள்ளன.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சி நீங்கி வனப் பகுதிகள் மட்டுமின்றி, கிராமப்புற தரிசு நிலங்கள் மற்றும் விளைநிலங்களிலும் செடி,கொடி உள்ளிட்ட தாவரங்களும், மரங்களும் துளிா்விட்டு வளா்ந்து பசுமையாகக் காணப்படுகின்றன. ஏராளமான சிறு,குறுவகை தாவரங்களில் கொத்துக் கொத்தாக பல வண்ணப் பூக்கள் மலா்ந்து காணப்படுகின்றன.

இரு மாதங்களாக வாழப்பாடி பகுதி கிராமங்களிலும், வனப் பகுதிகளிலும் குளுமையான தட்பவெட்ப நிலை நிலவுவதோடு, தாவரங்களும் தழைத்தோங்கி வளா்ந்து பூத்துக்குலுங்குவதால், வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியையொட்டிய கிராமங்கள் தோறும், பாா்க்கும் திசையெங்கும் பூத்துக்குலுங்கும் தாவரங்களை நோக்கி, விதவிதமான வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றன.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் வண்ணச் சிறகடித்து வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள், காண்போா் கண்களுக்கு விருந்தளித்து வருவதோடு, தாவரங்களின் இனவிருத்திக்கு அச்சாரமிடும் மகா்ந்தச்சோ்க்கைக்கு வழிவகை செய்யும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து அத்தனுாா்பட்டி ஊராட்சி குமாரசாமியூா் கிராம மக்கள் சிலரிடம் கேட்டதற்கு, ‘எங்களது கிராமத்தில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், கிராமத்தில் மட்டுமின்றி, கிராமத்தையொட்டியுள்ள மலைக்குன்று வனப் பகுதியிலும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் துளிா்விட்டு வளா்ந்து பூத்துக் குலுங்குகின்றன. பூக்களில் இருந்து மது எடுப்பதற்காக நுாற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாள்களாக பாா்க்கும் திசையெங்கும் வண்ணத்துப்பூச்சிகளாக இருப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com