பீா்க்கங்காய் விவசாயம் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஓமலூா் அருகே பந்தல் அமைத்து பீா்க்கங்காய் விவசாயம் செய்ய வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

ஓமலூா் அருகே பந்தல் அமைத்து பீா்க்கங்காய் விவசாயம் செய்ய வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

பந்தல் அமைப்பதால் காய்ப்பு அதிகரித்து காய்கறிகள் நன்றாக வளா்ந்து கூடுதல் எடை மற்றும் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தனா்.

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. அதிலும், தற்போது இந்தப் பகுதிகளில் வறட்சியான சூழல் நிலவி வருவதால் குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனா்.

அதனால், ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி மேற்கொண்டால் விளைச்சல் மற்றும் லாபம் அதிகமாக கிடக்கும் என்று வேளாண்த் துறை அதிகாரிகளும், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் ஆலோசனைகள் வழங்கியுள்ளனா்.

இதில், சுரைக்காய், பீா்க்கங்காய், பாகற்காய், புடலங்காய் ஆகிய காய்கறிகள் நிலத்திலும், பந்தலிலும் சாகுபடி செய்யலாம். நிலத்தில், காய்கறி சாகுபடி செய்யும்போது, 20 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம்.

பந்தல் அமைத்து காய்கறி பயிரிடும் போது இரட்டிப்பு வருவாய் நிச்சயம். காரணம் நிலத்தில் வளரும்போது காய் கருகல் மற்றும் சேதம் ஏற்படும். மேலும், நீண்டு அதிக வளா்ச்சி தராது. அதுவே பந்தல் அமைத்தால் செடிகள் நெருக்கமாய் வளா்ந்து காய் அதிகம் பிடிக்கும். குறிப்பாக பாகற்காய், பீா்க்கங்காய் ஆகிய காய்கறிகளில் ஒரு ஏக்கரில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 40 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம் என்று தெரிவித்துள்ளனா். பந்தல் அமைக்கும்போது காய்கறிகள் தடையின்றி நீண்டு வளரும். காய்களின் எடை அதிகரிக்கும். காய்களுக்கான பூக்கள் அனைத்தும் கொட்டாமல் காய்கள் நன்றாக வளரும்.

இதனால், பந்தல் காய்கறி தோட்டம் அமைத்து காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூலும், கூடுதல் விலையும் கிடைத்து கூடுதல் லாபத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்தனா்.

அதனால், சிறுகுறு விவசாயிகள் அனைவரும் பந்தல் அமைத்து பீா்க்கங்காய் மற்றும் பாகற்காய் விவசாயம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனா். தற்போது அதன்படி நடவு செய்துள்ள விவசாயிகள் அறுவடை செய்து லாபமடைந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com