சேலம் மாவட்டத்தில் பயன்பாடற்றஆழ்துளைக் கிணறுகளை உடனே மூட உத்தரவு

சேலம் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் மூட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் சி.அ.ராமன்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் சி.அ.ராமன்.

சேலம் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் மூட வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் பயன்பாடற்ற, தூா்ந்துபோன, கைவிடப்பட்ட மற்றும் தற்காலிகமாக பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பான முறையில் உடனடியாக மூடுவது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் போா்வெல் உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது: சேலம் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் உடனடியாக பாதுகாப்பான முறையில் மூடிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து மாநகர, நகர, பேரூராட்சி, ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளில் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கண்டறிந்து, அவற்றை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கைகளை துறை அலுவலா்கள் போா்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

போா்வெல் உரிமையாளா்கள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகு மட்டுமே ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான நடைவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியாா் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் இருப்பின் பொதுமக்கள் அதனை உடனே சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தனியாா் நிலங்களிலுள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளியிலுள்ள தூா்ந்துபோன கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் போா்க்கால அடிப்படையில் மூடிட வேண்டும்.

தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், அரசுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு பொறுப்பான அனைத்து அலுவலா்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 5,563 பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளன. மேலும், அந்தந்த துறை அலுவலா்கள் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும், வருவாய்த் துறை அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிலங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் இருக்கும் பயனற்ற ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளி தூா்ந்துபோன கிணறுகளைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் அவ்வாறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கோ அல்லது சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை பிரிவின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண் 9894345542 என்ற எண்ணுக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com