வெற்றிலை விலை வீழ்ச்சி:வாழப்பாடி பகுதி விவசாயிகள் கவலை

வாழப்பாடி பகுதியில் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால், வெற்றிலை பயிரிட்டு வரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாழப்பாடி பகுதியில் வெற்றிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால், வெற்றிலை பயிரிட்டு வரும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை அடிவார கிராமங்கள், வசிஷ்டநதி, வெள்ளாற்றுக் கரையோர கிராமங்கள் மற்றும் கிணற்றுப் பாசன வசதி கொண்ட நன்செய் விவசாயிகள் நீண்டகால பலன் தரும் பயிரான வெற்றிலையை பயிரிட்டு வருகின்றனா்.

விளைவிக்கும் கருப்பு (தாம்பூல காபி ரகம்) மற்றும் வெள்ளை வெற்றிலையை வாழப்பாடியை அடுத்த பேளூா் மற்றும் பெரியகிருஷ்ணாபுரத்தில் இயங்கும் வெற்றிலை மண்டிக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனா். விவசாயிகளிடமிருந்து ஏல முறையில் வெற்றிலையை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, பெங்களூரு, மைசூரு பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனா்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் வெற்றிலை பயிரிட்டு வந்த நிலையில், இரு ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சியால் பாசனத்துக்கு வழியின்றி 600 ஹெக்டோ் பரப்பளவுக்கு மேல் வெற்றிலை கொடிக்கால் தோட்டங்கள் காய்ந்து விட்டன. இதனால், வாழப்பாடி பகுதியில் வெற்றிலை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காக குறைந்து போனது.

தற்போது பருவ மழையின் காரணமாக கரூா், பரமத்தி வேலுாா், மோகனூா் உள்ளிட்ட பகுதியில் வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், 60 கவுளிகள் (ஏறக்குறைய 6,500 வெற்றிலைகள்) கொண்ட ஒரு கட்டு (ஒத்து) முதல்தர வெற்றிலை கடந்த சில தினங்களாக அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரையும், இரண்டாம்தர மற்றும் மூன்றாம்தர கழிவினை வெற்றிலை ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே விலை போகிறது.

இதனால், வெற்றிலை தோட்டத்துக்கு நீா் பாய்ச்சி தொடா்ந்து பராமரிப்பதோடு, பதம் பாா்த்து பறித்து, விற்பனைக்கு கொண்டு வரும் செலவுக்கே விலை கட்டுப்படியாகாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடி பகுதி வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், வாழப்பாடி பகுதியில் ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவுக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலைத் தோட்டங்கள், வறட்சியால் படிப்படியாக குறைந்து, தற்போது ஆயிரம் ஏக்கருக்கு கீழ் குறைந்து விட்டது. அவ்வப்போது பெய்து வரும் பருவ மழையால், வெற்றிலை உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், மற்ற பகுதியில் வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை படுவீழ்ச்சியடைந்துள்ளது.

விளைந்த வெற்றிலையை பறித்து விற்பனைக்கு கொண்டு வரும் செலவுக்கே உரிய விலை கிடைக்கவில்லை. விளையும் நேரத்தில் விலை கிடைக்காமல் போவதும், விலை உயரும் நேரத்தில் விளைச்சல் இல்லாமல் போவதும் கவலையளிக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com