செல்லிடப்பேசி மூலமே வானொலி நடத்தலாம்

பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு உத்திகள் என்ற தலைப்பிலான இருநாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு உத்திகள் என்ற தலைப்பிலான இருநாள் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைப் பேராசிரியர் சு. நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு வல்லுநரும் சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியருமான முனைவர் தங்க. ஜெய்சக்திவேல் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்புப்  பயிற்சிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது:
இன்றைக்கு வானொலி தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளதுபோல, நிகழ்ச்சி தயாரிப்பு உத்திகளும், பெரும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளன.
இன்றைக்கு வானொலி கேட்பதற்கு பணம் தரும் சூழல் உள்ளது. நேயர்களின் எண்ணிக்கையை தக்கவைக்கும் வண்ணம் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற வானொலிகள் மாதத்திற்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களை, தங்களது ஒலிபரப்பை கேட்பதற்காக மட்டும் தொழில்நுட்பக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல உலகத்தின் பல வானொலிகளும் தமது நிகழ்ச்சிகளை மேம்படுத்த இதுபோன்ற உத்திகளை பின்பற்றுகின்றன. அதேபோல இன்றைக்கு உள்ளூர் நிகழ்ச்சிகளை, இணையதளத்தில் வலையேற்றினால், அந்த நிகழ்ச்சிகளை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேயர்களுக்கு மேல் கேட்டால், வலையேற்றம் செய்தவருக்கு இணையதளம் பணம் வழங்கும் சூழல் உள்ளது.
வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு சிற்றலை, மத்திய அலை, பண்பலை என பல்வேறு வடிவங்களில் மாறுபாடுகளுடன் திகழ்கிறது. மிகுந்த சிரமப்பட்டு டியூன் செய்து வெளிநாட்டு வானொலிகளைக் கேட்ட நிலைமாறி, தற்போது நொடிப் பொழுதில் வெளிநாட்டு வானொலிகளைக் கேட்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.
ஒரு செயலியைப் பயன்படுத்தி 24 ஆயிரம் வானொலிகளை கேட்க முடியும் என்பதை இணையம் சாத்தியப்படுத்தியுள்ளது.
வானொலிகள் பெருகியுள்ளதால், அதற்கேற்ப வேலைவாய்ப்பும் உருவாகியுள்ளது. மொழி ஆளுமை, தொடர்ச்சியான வாசிப்பு, எழுதும் திறன் ஆகியவை சிறந்த வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்பதால் மாணவர்கள் கல்விப் பயிலும் போதிலிருந்தே இவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது  உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு செல்லிடப்பேசியை மட்டுமே கொண்டு ஒரு வானொலி நிலையத்தையே நடத்திட முடியும். தொழில்நுட்பம் அளிக்கும் கட்டற்ற வெளியை இன்றைய படைப்பார்வம் மிக்க அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் இரா. சுப்பிரமணி, மா. அனுராதா, மா. தமிழ்ப்பரிதி மற்றும் திருப்பூர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com