பருவநிலை மாற்றத்தை சமாளிக்க மலைகள், நிலப் பரப்புகளில் மரங்களை நட வேண்டும்: வெ.பொன்ராஜ்

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், மலைகளிலும், நிலப்பரப்பிலும் அதிகமான மரங்களை நட வேண்டும்

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், மலைகளிலும், நிலப்பரப்பிலும் அதிகமான மரங்களை நட வேண்டும் என மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ் அறிவுறுத்தினார்.
சேலத்தில் நுகர்வோர் குரல் பவுண்டேஷன் சார்பில் நெகிழி மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பூபதி, பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட வெ.பொன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. இஸ்ரோ நிலவில் தரையிறங்கும் நான்காவது நாடாக திகழும். இதற்கான தொழில்நுட்பமும், வடிவமைப்பும் இந்தியாவிடம் உள்ளது. அதேபோல விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் வெற்றி பெறும். 
சுற்றுச்சூழலை பொறுத்தவரையில் ஒவ்வொரு தெரு, வார்டில் கட்டப்படும் மழைநீர் வடிகால் ஓடையிலோ அல்லது கால்வாயிலோ சென்று முடிகிறது.
எனவே, ஒவ்வொரு தெரு, வார்டில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரைத் தேக்கிவிட முடியும். பெய்யும் மழையை பூமிக்குள் அனுப்பும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும். அரசும், மக்களும் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
குப்பைத்தொட்டி இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும். வீட்டில் சேரக் கூடிய குப்பைக் கழிவுகளை பூந்தொட்டிகளில் உரமாக மாற்ற வேண்டும்.
மேலும் மாநகராட்சி வீடுகளில் சேரும் குப்பைக் கழிவுகளை நேரடியாகப் பெற்றால் குப்பை பிரச்னை தீர்வு பெறும். நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் முறையாக சீர்படுத்தும்போது குப்பை இல்லாத கிராமம், நகரமாக மாற்ற முடியும்.
உலகளவில் சீனாவும், இந்தியாவும்தான் பசுமை பரப்பு உள்ளது.
சீனாவில் 60 சதவீதம் பசுமை பரப்பு உள்ளது. மீதி 40 சதவீதம் விவசாய நிலங்களாக உள்ளன. இந்தியாவில் 80 சதவீதம் விவசாய நிலமும், 20 சதவீதம் அடர்ந்த காடுகளும் உள்ளன.
பருவநிலை மாற்றத்துக்கு வளர்ந்த நாடுகள்தான் காரணம். மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் அல்ல. பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், நிலப்பரப்பிலும் அதிகமான மரங்களை நட வேண்டும். இதன் மூலம் பசுமை பரப்பு அதிகமாகி மழை பொழியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com