வீரபாண்டி தொகுதியில் ரூ.824 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வீரபாண்டி தொகுதியில் இளம்பிள்ளை, பனமரத்துப்பட்டி பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 799 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.824 கோடியில் ஆய்வுப் பணி


வீரபாண்டி தொகுதியில் இளம்பிள்ளை, பனமரத்துப்பட்டி பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 799 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.824 கோடியில் ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி நெய்க்காரப்பட்டியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாமை சனிக்கிழமை தொடக்கி வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:  வீரபாண்டி தொகுதி மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுக்களைப் பெற்று அந்த மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இத் திட்டத்தின் வாயிலாக, நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருக்கிற பிரச்னைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. 
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வீரபாண்டி தொகுதியில் மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.213 கோடியில் 29,531 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த் துறையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8,360 பயனாளிகளுக்கு ரூ.85 கோடியில் பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. 
விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், 4,035 பயனாளிகளுக்கு ரூ.10.81 கோடியில்  வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.  பொது சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையில் சுமார் ரூ.54.80 லட்சத்தில் தும்பல்பட்டி மற்றும் முருங்கம்பட்டி ஆகிய பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 
பனமரத்துப்பட்டி,  இளம்பிள்ளை மற்றும் கன்னங்குறிச்சி ஆகிய 3 இடங்களில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.1.87 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் மூலம் 28,777 பயனாளிகளுக்கு ரூ.66.29 கோடி மகப்பேறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  இத் தொகுதியில் 2,109 பச்சிளம் குழந்தைகளுக்கு அம்மா பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 
நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக கடந்த 8 ஆண்டுகளில் ரூ.60 கோடியில் 116 கி.மீ. சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.   ரூ.26.5 கோடியில் 40 கி.மீ. சாலைப் பணிகள் அகலப்படுத்தப்பட்டு  புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.45 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அரியானூர் சாலை சந்திப்பில் 8 வழிச் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வேளாண் துறையில் ரூ.8.52 கோடியில் 57,364 விவசாயிகளுக்கு விவசாயப் பண்ணை இயந்திரங்கள், கருவிகள், விதைகள், சொட்டு நீர்ப் பாசன மானியம், இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  வேளாண் பொறியியல் துறையில் ரூ.1.25 கோடியில் 1,823 விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை பொருளீட்டுக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 123 விவசாயிகளுக்கு சுமார் ரூ.2.50 கோடி பொருளீட்டுக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமார் ரூ.3.5 கோடியில் 2 ஆயிரம் மெட்ரிக் டன்  கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள் மற்றும் பரிவர்த்தனைக் கூடம், 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்ப்பதனக் கிடங்கு மற்றும் சூரிய உலர்த்தி உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.    
 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 8 ஆண்டுகளில் 245 ஊரகக் குடியிருப்புகளுக்கு சுமார் ரூ.11.50 கோடியில் தனி மின்விசை குடிநீர்த் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  பெரிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக ரூ.270 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,345 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 1.08 மில்லியன் லிட்டர் அளவுக்கு சீரான குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது.
இளம்பிள்ளை,  பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 799 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சுமார் ரூ.824 கோடியில் திட்டத்துக்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  இதன் மூலம் இந்தப் பகுதியிலுள்ள லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் வசதியைப் பெறுவார்கள்.
கூட்டுறவுத் துறையில் 30,625 விவசாயிகளுக்கு ரூ.160 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,534 விவசாயிகளுக்கு ரூ.9.50 கோடி மத்திய காலக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2,76,433 விவசாயிகளுக்கு ரூ.900 கோடி நகைக்  கடன்  வழங்கப்பட்டுள்ளது. 349 மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் ரூ.1.50 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த 774 மகளிருக்கு ரூ.20 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.   
8 ஆண்டுகளில் வீரபாண்டி தொகுதியில் மட்டும் கூட்டுறவு துறை மூலம் மொத்தம் 3,15,788 நபர்களுக்கு சுமார் ரூ.1,110 கோடியில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ.10 கோடியில் 13,395 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், விலையில்லா அசல் இனக் கோழிகள், கால்நடை பாதுகாப்பு திட்டம், மாநில தீவன அபிவிருத்தித் திட்டம், மேச்சேரி இன ஆடு அபிவிருத்தித் திட்டம், சிறு பால்பண்ணை அமைக்கும் திட்டம் மற்றும் கால்நடை காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 
வீரபாண்டி தொகுதியில் மட்டும் 8 ஆண்டுகளில் 24,474 மாணவ, மாணவியருக்கு ரூ.26.7 கோடியில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் ரூ.5.72 கோடியில் 23,564 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இதில் பல்வேறு துறை சார்பில் 523 பயனாளிகளுக்கு ரூ.5.21 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆட்சியர் சி.அ.ராமன் வரவேற்றார். வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. பி.மனோன்மணி முன்னிலை வகித்தார். எம்.பி. என்.சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், வெற்றிவேல், மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் வி.ஜெயராமன், சேகோசர்வ் தலைவர் என்.தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com