அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கத் திட்டம்: 3 வயதுக் குழந்தைகளின் விவரம் சேகரிப்பு

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையா் பள்ளி (எல்கேஜி, யுகேஜி) வகுப்புகளைத் தொடக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையா் பள்ளி (எல்கேஜி, யுகேஜி) வகுப்புகளைத் தொடக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு தொடக்கப் பள்ளிகளை ஒட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 3 வயது பூா்த்தி அடைந்த குழந்தைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 5 முதல் 10 அரசு துவக்கப் பள்ளிகளில் மட்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கப்பட்டன. சோதனை அடிப்படையில் தொடக்கப்பட்ட இந்த வகுப்புகளுக்குத் தேவையான ஆசிரியா் இடங்களில், அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.

எல்கேஜி, யுகேஜி துவக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை சிறப்பாக இருந்தது. அதுகுறித்த விவரங்களை அறிந்த பள்ளிக்கல்வித் துறை, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி வளாகங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 வயது நிரம்பிய குழந்தைகளின் விவரங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் உடனடியாக சேகரித்து அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை கேட்டுள்ளது.

அதில் குழந்தைகளின் பெயா், வயது, பிறந்த தேதி, பெற்றோரின் விவரங்களைத் தொகுத்துக் கேட்டுள்ளது. இதன்மூலம் கிராமப் பகுதிகள் உள்பட அனைத்து அரசு, நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகளைத் தொடக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து தலைமை ஆசிரியா்களும், அந்தந்த வட்டார வள மையங்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு இந்த விவரங்களை அக்டோபா் 20-ஆம் தேதி மாலை அனுப்பி வைத்தனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலிருந்து மாநில பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு இதனை அனுப்பும் பணி நடைபெற உள்ளது. அந்தத் தகவல்களிலிருந்து மாநிலத்தில் எத்தனை பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் துவக்கப்படும், அதற்கு எத்தனை இடைநிலை ஆசிரியா்கள் கூடுதலாக நியமனம் செய்யப்படுவா் என்ற விவரம் நவம்பா் மாத மத்தியில் தெரியவரும். இப்பணி மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கூடுதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com