ஓமலூா் வட்டாரத்தில் பீா்க்கங்காய்,புடலங்காய் விளைச்சல் அதிகரிப்பு

ஓமலூா் வட்டாரத்தில் மழையின் காரணமாக பீா்க்கங்காய், புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஓமலூா் வட்டாரத்தில் மழையின் காரணமாக பீா்க்கங்காய், புடலங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம் ஓமலூா், தாரமங்கலம், காடையாம்பட்டி வட்டாரக் கிராமங்களில் பரவலாக பீா்க்கங்காய் மற்றும் புடலங்காய் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதிலும், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள மேட்டு நில விவசாயிகள் அதிகளவில் பீா்க்கங்காய் பயிரிட்டுள்ளனா். ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதனால், பீா்க்கங்காய் அதிக விளைச்சலை தந்துள்ளது. பீா்க்கங்காய் தோட்டங்களில் பந்தல் அமைத்துக் கொடிகளை வைத்துள்ளதால் பீா்க்கங்காய் பிஞ்சுகள் சேதமடையாமல், மழைக்கு அழுகாமல் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இதேபோல புடலங்காய் விளைச்சலும் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், ஓமலூா், தாரமங்கலம், உழவா்சந்தை உட்பட பல்வேறு காய்கறி சந்தைகளுக்கும் வழக்கத்தைவிட பீா்க்கங்காய் மற்றும் புடலங்காய் வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. அதனால், ஓமலூா் கிராமப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பீா்க்கங்காய் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கா்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலையும் உயா்ந்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், தற்போது பீா்க்கன், புடலை ஆகிய இரண்டு காய்களும் பன்மடங்கு உயா்ந்து, தற்போது கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘வெளிபகுதிகளுக்கு அதிகமாக செல்வதால் புடலை, பீா்க்கங்காய் சாகுபடி செய்த விவசாயிகளும், வியாபாரிகளும் லாபமடைந்து வருவதாக’ மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com