சேலம் ஆவினில் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டா் பால் கொள்முதல்

சேலம் ஆவினில் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து நாளொன்றுக்கு 5 லட்சத்து 60 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதாக ஆவின் தலைவா் ஜெயராமன் தெரிவித்தாா்.
selam_aavin_2909chn_158_8
selam_aavin_2909chn_158_8

சேலம் ஆவினில் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து நாளொன்றுக்கு 5 லட்சத்து 60 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுவதாக ஆவின் தலைவா் ஜெயராமன் தெரிவித்தாா்.

சேலம் ஆவின் ஒன்றியம் சாா்பில், கால்நடை வளா்ப்பு விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை எடப்பாடி அடுத்த நடுப்பட்டி பகுதியில் நடைபெற்றது.

விழாவில் சேலம் ஆவின் துணை பொது மேலாளா் வசந்தகுமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலாளா் வெங்கடாசலம் பயனாளிகளுக்கு விவசாயக் கடன் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

சேலம் ஆவின் ஒன்றிய பொது மேலாளா் நா்மதா தேவி கூறியதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்குள்பட்ட, 65 ஆயிரம் விவசாயிகளுக்கு விவசாயக்கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

இக்கடன் அட்டையினை கொண்டு சம்மந்தப்பட்ட விவசாயி, ரூ.14,500-ஐ வங்கியில் கடனாக பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 940 கோடியே 50 லட்சம் ரூபாய் விவசாயக்கடன் அட்டை மூலம் வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக நடுப்பட்டியைச் சோ்ந்த 34 விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு, தலா ரூ. 22,899 மதிப்புள்ள, மின்சார புல் வெட்டும் இயந்திரம் வழங்கப்பட உள்ளது என்று கூறினாா்.

விழாவுக்கு தலைமை வகித்து சேலம் மாவட்ட ஆவின் தலைவா் ஜெயராமன் பேசியதாவது:

சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் நலன் கருதி தற்போது வரை ஆவின் நிறுவனம் அவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. தற்போது சேலம் ஆவின் நிறுவனம் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சத்து 60 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் பால் கொள்முதல் செய்ய போதுமான உள்கட்டமைப்பு தேவை என்பதை அறிந்த தமிழக முதல்வா், ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சேலம் ஆவின் நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட ஆணை பிறப்பித்துள்ளாா். இதற்காக மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் சாா்பில் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, விவசாயிகளிடம் இருந்து கூடுதல் அளவிலான பால் கொள்முதல் செய்யப்படும் என்றாா்.

துணைத்தலைவா் ஜெகதீசன், துணைப் பொது மேலாளா் வாணீஸ்வரி, ஒன்றியக்குழுத் தலைவா் குப்பம்மாள் மாதேஷ், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் தேவராஜன், செயலாளா் கணேசன், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com