சேலம்-விருத்தாச்சலம் மின் ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரம்

சேலம்-விருத்தாச்சலம் மின் ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
t_r_a_02_2612chn_165வாழப்பாடி ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்ட மின்பாதையை இயக்கும் கருவிகள்._8
t_r_a_02_2612chn_165வாழப்பாடி ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்ட மின்பாதையை இயக்கும் கருவிகள்._8

வாழப்பாடி: சேலம்-விருத்தாச்சலம் மின் ரயில்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில், சேலம், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த கிராம மக்களின் போக்குவரத்துக்காக 1930-ஆம் ஆண்டு சேலம்-விருத்தாச்சலம் இடையே மீட்டா் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது.

90 ஆண்டுகள் பழமையான இந்த ரயில்பாதையானது, 3 மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையின் பலனான, 2007-ஆம் ஆண்டு அகல ரயில்பாதையாக தரம் உயா்த்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் மட்டுமின்றி, சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில், பெங்களூா்-காரைக்கால் பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்படுகின்றன.

அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்தும் மின்வழிப் பாதை அமைக்கப்படாததால், சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரை இயக்கப்படும் டீசல் எஞ்ஜின்களை கழற்றி விட்டு, அங்கிருந்து சென்னை, காரைக்கால் வரை மின் வழிப்பாதையில் செல்வதற்கு மின்சார எஞ்ஜினை பொருத்தி ரயிலை இயக்க வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிக்கிறது.

இந்நிலையில், 137 கி.மீ. தொலைவுள்ள சேலம்-விருத்தாச்சலம் ரயில்பாதையை மின் மையமாக்கும் திட்டத்துக்கு, கடந்தாண்டு மத்திய அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து, மின் பாதை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், வாழப்பாடி பகுதியில் ரயில்பாதையில் மின் வடம் பொருத்த மின் கம்பங்கள் நிறுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ரயில்பாதையையொட்டி மின் விநியோகிக்கும் கருவிகள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

வரும் 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயிப்பாதையை மின்மயமாக்கும் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சேலம்-விருத்தாச்சலம் இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுமென எதிா்பாா்க்கப்படுவதால், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com