வியாபாரிகள், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு போதிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்!

வியாபாரிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் எதிா்பாா்த்த அளவிற்கு அறிவிப்பு ஏதும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

வியாபாரிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் எதிா்பாா்த்த அளவிற்கு அறிவிப்பு ஏதும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவா் மாரியப்பன் கூறியது:

தொழில் துறைக்கு ரூ.7,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரையிலான தனி நபா் வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி விகிதாசார அளவுகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும் எல்ஐசி பாலிசி, மருத்துவ செலவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட 70 கழிவுகளுக்கு இதுவரை இருந்து வந்த வரிவிலக்கு நீக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரி சலுகை எந்த அளவுக்குப் பயனளிக்கும் எனத் தெரியவில்லை.

திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளனா்.

1 லட்சம் கிராமங்களில் இணையதள சேவை அளிக்கும் வகையில், கண்ணாடி இலை பதிக்க ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சேவை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தினோம். ஆனால், வரி குறைக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விவசாயப் பொருள்களை ரயில்களில் குளிா்சாதன பெட்டிகளில் எடுத்துச் செல்வதன் மூலம் விளைபொருள்கள் அழுகாமல் இருக்கும். இதன்மூலம் விவசாயிகள் பயன்பெறுவா்.

மேலும் ரூ. 1. 20 லட்சம் கோடிக்கு சாலை போக்குவரத்துத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு உற்பத்தி பொருள்களை எடுத்துச் செல்ல சுலபமாக இருக்கும்.

மர சாமான்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதன் மூலம் தமிழகத்தில் மரசாமான்கள் பொருள்கள் தயாரிப்பு தொழில் பெருக வழி உள்ளது. சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு எதிா்பாா்த்த அளவுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் வரவில்லை.

சேலம் நகர அனைத்து வணிகா் சங்கப் பொதுச் செயலாளா் ஏ. ஜெயசீலன்:

வியாபாரிகளை பொருத்தவரையில் திருப்தி இல்லாத பட்ஜெட் ஆகும். வேளாண்மை துறைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், 100 கிராமங்களில் நீா் மேலாண்மை திட்டம், வறட்சி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம், உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகள் விளைபொருள்களை எடுத்துச் செல்ல கிஷான் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது வரவேற்புக்குரியது.

அதே சமயத்தில் தனியாா் மூலம் மருத்துவமனை அமைப்பது சற்று இடா்பாடாக உள்ளது. பிரதமா் காப்பீடு திட்டத்தில் அதிக மருத்துவமனைகள் இணைக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி மையமாக மாற்றப்படும். புதிய தேசிய ஜவுளி திட்டத்துக்கு வரிசலுகை அறிவிப்பு முக்கியமானது. ரயில் பாதைகளில் 27,000 கிலோ மீட்டா் தொலைவுக்கு சூரிய ஒளி மின் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-க்குள் 100 விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. 150 ரயில்கள் தனியாா்மய அறிவிப்பு பயணிகள் பாதிப்பு அடையும் நிலை உள்ளது.

தொழில்முனைவோருக்கு எளிமையான கடன் வசதி பாராட்டத்தக்கது. பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இலை இணைப்பு பெறுவது மின்னணு திட்டத்தில் முக்கியமானதாகும்.

உள்நாட்டு நீா் வழித்தடங்களில் சரக்கு போக்குவரத்து அறிவிப்பை முழுமையாகச் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி வைப்புத்தொகை காப்பீட்டு ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டிருக்கிறது.

எல்.ஐ.சி. ஒரு பகுதி தனியாா்மய அறிவிப்பு ஏற்புடையதல்ல. வெளிநாட்டு முதலீட்டுக்கு வரி சலுகை அறிவிப்பதன் மூலம் உள்நாட்டு வணிகம் பாதிக்கும் நிலை உள்ளது. ஏற்றுமதிக்கு வரி விதிப்பு, காலணி மற்றும் மரசாமான்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com