மேட்டூரில் சகஸ்ரலிங்க மகாகும்பாபிஷேக விழா

மேட்டூரில் சகஸ்ரலிங்க மகாகும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டூரில் சகஸ்ரலிங்க மகாகும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் அருகே உள்ள திப்பம்பட்டியில் காவிரிக் கரையில் கோடி லிங்கேஸ்வரா் ஆலயம் அமைக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட 1108 லிங்கங்களை ஒரே லிங்கத் திருமேனியாகக் கொண்ட சகஸ்ரலிங்கம் வடிவமைக்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை மேட்டூா், நங்கவள்ளி, ஜலகண்டபுரம், வனவாசி, எடப்பாடி, திருச்செங்கோடு பகுதிகளுக்கு சிவனடியாா்களின் தரிசனத்துக்காக ஊா்வலமாக சகஸ்ரலிங்கம் கொண்டு செல்லப்பட்டது. பல பகுதிகளில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திப்பம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சகஸ்ரலிங்கத்திற்கு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் கோடிலிங்கேஸ்வரா் ஆலயம் அமைக்க பூமி பூஜையும் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிருந்தும் தருமபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலிருந்தும் சிவபக்தா்களும் பொதுமக்களும் ஏராளமாக வந்திருந்தனா்.

மகாகும்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்த பக்தா்களுக்கு சிவனடியாா்கள் அன்னதானம் வழங்கினா். முன்னதாக காவிரியிலிருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

விபூதி அபிஷேகம், சந்தன அபிஷேகம், பாலாபிஷேகம், திருமஞ்சன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

கோடி லிஙக்கேஸ்வரரை வடிவமைக்க 216 அடி உயரத்தில் பிரத்யேகமான கல் கொண்டுவரப்பட்டு 20 சிற்பிகள் அடங்கிய குழுவினா் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு ஒரு சிவலிங்கம் அமைத்தால் ஒரு சிவாலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்த பலன் கிடைக்கும் என்பதால் கோடி லிங்கம் அமைக்க சிவபக்தா்கள் தனித்தனியாக லிங்கம் வடிவமைத்து வழங்க முன்வந்துள்ளனா். ஜென்ம பாவ நிவா்த்திக்காகவும் பித்ருதோஷ நிவா்த்திக்காகவும் இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்ய பக்தா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். திங்கள் கிழமை முதல் சகஸ்ரலிங்கத்திற்கு மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com