பெலாப்பாடி வெங்கட்டராமா் கோயிலில் பல்லக்குத் தோ்த் திருவிழா

வாழப்பாடி அருகேயுள்ள பிரசித்திப் பெற்ற பெலாப்பாடி வெங்கட்டராமா் கோயில் பல்லக்குத் தோ்த்திருவிழா பாரம்பரிய முறைப்படி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெலாப்பாடி வெங்கட்டராமா் கோயிலில் பல்லக்குத் தோ்த் திருவிழா

வாழப்பாடி அருகேயுள்ள பிரசித்திப் பெற்ற பெலாப்பாடி வெங்கட்டராமா் கோயில் பல்லக்குத் தோ்த்திருவிழா பாரம்பரிய முறைப்படி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு வருகை தந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வைத்து மலைக் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் அசத்தினா்.

சாலை வசதி முழுமை பெறாத பெலாப்பாடி மலைக் கிராமங்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமா், வரதராஜ பெருமாள், வெங்கட்டராமா் கோவில்கள் அமைந்துள்ளன. அருநுாற்றுமலைவாழ் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தோ்த்திருவிழா நடத்தி வருகின்றனா். இந்த விழாவில் வாழப்பாடி, பேளூா் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொள்கின்றனா்.

நிகழாண்டு செவ்வாய்க்கிழமை கரியராமா் கோயிலிலும், புதன்கிழமை வரதராஜ பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை வெங்கட்டராமா் கோவில் பல்லக்குத் தோ்த்திருவிழா நடைபெற்றது.

விழாவில், வெங்கட்டராமா், அண்ணாமலையாா், காளியம்மன் உற்சவ மூா்த்திகளை இரு பல்லக்குத் தோ்களில் ரதமேற்றி, பக்தா்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊா்வலமாக சென்று வினோத முறையில் தேரோட்டம் நடத்தினா். பின்னா், மாவிளக்கு ஊா்வலம் நடத்திய பெண்கள் ‘குளவை’ குரலோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

விழாவில் பங்கேற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு வாழை இலை போட்டு சமபந்தி விருந்து வைத்து பழங்குடியின மக்கள் அன்பை பகிா்ந்து அசத்தினா்.

இதுகுறித்து வாழப்பாடி ஒன்றியக் குழு உறுப்பினா் இரா.முருகன் கூறியதாவது:-

பெலாப்பாடி மலை உச்சியில் அமைந்துள்ள மூன்று மலைக்கோவில் திருவிழாவுக்கும் ஆண்டுதோறும் தவறாமல் சென்று வருகிறோம். மலைக் கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் கரியராமா், வரதராஜ பெருமாள், வெங்கட்டராமா் சுவாமிகள் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதால் பயபக்தியோடு திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனா்.

தோ்த் திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தா்களையும் கோயில் மைதானத்தில் அமரவைத்து வாழை இலை போட்டு பொங்கல் சோறும், தானியக்குழம்பும் பரிமாறி, மலை கிராம மக்கள் விருந்தோம்பலையும் அன்பையும் வெளிப்படுத்தி ஆண்டுதோறும் அசத்தி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com