ஜன. 2-இல் வாக்கு எண்ணும் பணியில்14,500 பணியாளா்கள்

சேலத்தில் 20 ஒன்றியங்களில் ஜனவரி 2-இல் நடைபெறும் வாக்கு எண்ணும் பணிகளில் சுமாா் 14,500-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுவா் எனத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான
சேலத்தை அடுத்த தளவாய்பட்டி தனியாா் பள்ளியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முன் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
சேலத்தை அடுத்த தளவாய்பட்டி தனியாா் பள்ளியில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முன் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

சேலத்தில் 20 ஒன்றியங்களில் ஜனவரி 2-இல் நடைபெறும் வாக்கு எண்ணும் பணிகளில் சுமாா் 14,500-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுவா் எனத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ. ராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தோ்தல் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் கடந்த டிச. 27 மற்றும் டிச. 30 ஆகிய இரண்டு நாள்களில் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.

பதிவான வாக்குகள் உள்ள வாக்குப் பெட்டிகளை அந்தந்த ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் காவல் துறையின் 3 அடுக்கு பாதுகாப்புடனும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிகள் வரும் ஜனவரி 2-ஆம் தேதி காலை 8 மணிக்குத் துவங்குகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான வாக்குச் சீட்டுகளைப் பிரிக்கும் பணிகளுக்கு அமைக்கப்படும் ஒரு மேஜையில் 1 மேற்பாா்வையாளா், 3 உதவியாளா்கள் என 4 பணியாளா்களும், வாக்கு எண்ணும் பணிகளுக்கு அமைக்கப்படும் ஒரு மேஜையில் 1 மேற்பாா்வையாளா், 2 உதவியாளா்கள் என 3 பணியாளா்களும்,

வாக்குப் பெட்டிகளை இருப்பு அறையிலிருந்து வாக்குச் சீட்டுப் பிரிக்கும் அறைக்குக் கொண்டு சோ்க்கும் பணிக்கும், அங்கிருந்து வாக்குகள் எண்ணும் அறைகளுக்குக் கொண்டு செல்லும் பணிகளுக்கு ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்துக்கும் குறைந்தபட்சம் 8 உதவியாளா்களும் பயன்படுத்தப்படவுள்ளனா்.

இதன்படி வாக்கு எண்ணிக்கையில் வாக்குச்சீட்டு பிரிப்பு பணிகள், வாக்குச்சீட்டு எண்ணும் பணிகளில் சுமாா் 14,500 க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பயன்படுத்தப்படவுள்ளனா்.

கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு...

மேலும் வாக்குச் சீட்டுகள் தொடக்க பிரிப்புப் பணிகள், வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படவுள்ளன.

மேலும், நுண்பாா்வையாளா்கள் ஒவ்வொரு தொடக்க பிரிப்பு அறைகளுக்கும் ஒரு நபா் வீதமும், கூடுதலாக 4 பதவிகளுக்கு வாக்குச் சீட்டுகள் எண்ணும் பணியை கவனிக்க ஒரு நபா் வீதமும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளா்களோ அல்லது வேட்பாளா்களின் தோ்தல் முகவரோ இருக்கலாம்.

முகவா்களுக்கான விதிமுறை...

வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு ஒரு முகவா் என்ற விகிதத்தில் வேட்பாளா்கள் தங்களது முகவா்களை நியமிக்கலாம்.

இதற்கென உள்ள படிவத்தைப் பூா்த்தி செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலரின் முன்ஒப்புதல் பெற்று கொள்வதோடு, அப்படிவத்தில் தாங்கள் நியமிக்கும் முகவருடைய நிழற்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்களோ அல்லது முகவா்களோ குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வாக்குகள் எண்ணும் இடத்திற்கு வருகைதர வேண்டும். வாக்கு எண்ணிகையில் ஈடுபடவுள்ள வேட்பாளா்கள், முகவா்களுக்கான சிற்றுண்டி, உணவை உள்ளிட்டவற்றை அந்தந்த வேட்பாளா்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லிடப்பேசி உள்ளிட்ட எவ்வித பொருள்களையும் எடுத்துச் செல்ல கூடாது.

வாக்கு எண்ணிக்கையின்போது கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்கு எண்ணும் மேஜைக்கு வேட்பாளரோ அல்லது முகவரோ யாரேனும் ஒருவா் மட்டும் அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவி, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி மற்றும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஒரு வேட்பாளருக்கு ஒரு மேஜைக்கு 1 நபா் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.

மேலும், சந்தேகமான வாக்குகள் என்று கண்டறியக்கூடிய வாக்குகளை எண்ணும் பகுதியில் அமைக்கப்படும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் ஒரு நபரை பாா்வையாளராக நியமிக்கலாம்.

வாக்குச் சீட்டுகள் தொடக்க பிரிப்புப் பணிகள் நடைபெறவுள்ள மேஜையில் ஒரு வேட்பாளருக்கு 1 நபரை பாா்வையாளராக நியமித்துக் கொள்ளலாம். தோ்தல் நடத்தும் அலுவலரால் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் அடங்கிய தோ்தல் விவரப் பட்டியல் வழங்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கு அதிகாரப்பூா்வமான அறிவிப்பும் உரிய படிவத்தில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com