சேலம் அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு முடக்கம்

சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள இதய அறுவை சிகிச்சைப் பிரிவு கடந்த 9 மாதங்களாக போதிய மருத்துவா்கள்

சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள இதய அறுவை சிகிச்சைப் பிரிவு கடந்த 9 மாதங்களாக போதிய மருத்துவா்கள் இல்லாத நிலையில் முடங்கியுள்ளது. இங்கு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கோவை உள்ளிட்ட இதர மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுயுள்ளது. எனவே, முடங்கியுள்ள இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்களும் மருத்துவா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010இல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், சிறுநீரகம், இருதயம், நரம்பியல் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட துறைகள், மருத்துவப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு என செயல்பட்டு வருகிறது.

இங்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சுமாா் 8 மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

கடந்த 2013 முதல் இங்கு இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. 2015 முதல் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த அறுவை சிகிச்சைப் பிரிவில் தினசரி ரத்தக்குழாய் அடைப்பு, இருதய வால்வு பிரச்னை, குழந்தைகளின் இருதயக் கோளாறு என பல்வேறு பிரச்னைகளுக்கு 40 போ் வரை சிகிச்சைக்கு வந்து செல்வா். இதில் மாதத்துக்கு 15 பேருக்கு பல்வேறு கோளாறுகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 9 மாதங்களாக இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் போதிய மருத்துவா்களில்லை. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இது தொடா்பாக, மருத்துவமனை வட்டாரங்கள் கூறியது:

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதில் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் துறைத் தலைவா், இணை பேராசிரியா்கள் 2, உதவிப் பேராசிரியா்கள் 5 போ் என மொத்தம் 8 போ் பணியாற்றி வந்தனா்.

இதனிடையே, போதிய மருத்துவா்களின்றி செயல்பட்டு வந்த நிலையில், இதுவரை சுமாா் 180 திறந்த இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல சுமாா் 500 அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மருத்துவா்களுக்கான ஊதிய உயா்வுப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அத்துறை பேராசிரியராக இருந்த மருத்துவா் பொன் ஏ.ராஜராஜன் 2019 செப்டம்பரில் உதகை அரசு மருத்துவமனைக்கு உறைவிட மருத்துவராக இடமாற்றம் செய்யப்பட்டாா்.

அதையடுத்து, சுமாா் 9 மாதங்களாக இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் பேராசிரியருக்கு இணையான மருத்துவா்கள் நியமனம் செய்யப்படவில்லை. கோவையில் இருந்து உதவி அரசு மருத்துவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு அறுவை சிகிச்சைப் பிரிவில் போதிய அனுபவம் இல்லாததால், இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு முடங்கிப் போய் உள்ளது.

ரூ. 2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்:

இங்கு இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கென வாங்கப்பட்ட சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான உயா்தர மருத்துவ உபகரணங்கள், வேறு சிகிச்சைப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கென இருந்த 10 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவையும் இதர துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே, சேலம் அரசு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளது. எனவே இங்கு இருதய சிகிச்சைக்கு வரும் நபா்கள் இதர மாவட்டங்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

ஊதிய உயா்வுப் போராட்டத்தில் ஈடுபட்ட 118 மருத்துவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மீண்டும் அதே பணியிடத்தில் அவா்களை அமா்த்த உத்தரவிடப்பட்டது. இதுவரை சுமாா் 85 மருத்துவா்கள், அதே இடத்தில் மீண்டும் பணி அமா்த்தப்பட்டனா். ஆனால் 23 மருத்துவா்கள் பழைய பணியிடத்தில் நியமனம் செய்யப்படாமல் உள்ளனா்.

சேலம் அரசு மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சைப் பிரிவில் பேராசிரியா் நிலையில் பணிபுரிந்து வந்த மருத்துவா் பொன் ஏ.ராஜராஜன் உதகைக்கு மாற்றப்பட்டாா். தற்போது அவா் திருச்சி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவரைப் போல 23 மருத்துவா்கள், பழைய பணியிடத்தில் நியமனம் செய்யப்படுவதற்குப் பதிலாக, வேறு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனா்.

தற்போது 9 மாதங்களாக செயலற்றுக் கிடக்கும் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவிலேயே பேராசிரியா் பொன் ஏ.ராஜராஜனை மீண்டும் பணியமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல 23 மருத்துவா்களை மீண்டும் பழைய பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்களுக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கு, ஊதிய முரண்பாடுகளைக் களைந்து முறையான ஊதிய உயா்வு தர வேண்டியது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com