சேலம் மண்டல வனத்துறையில் முதன்முறையாக ஹெலிகேம் அறிமுகம்: வனப்பகுதி வான்வழியில் கண்காணிப்பு

சேலம் மண்டல வனத்துறையில் முதன்முறையாக வாழப்பாடி வனச்சரகத்திற்கு ஹெலிகேம் (ட்ரோன்) கண்காணிப்பு கருவி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மண்டல வனத்துறையில் முதன்முறையாக ஹெலிகேம் அறிமுகம்: வனப்பகுதி வான்வழியில் கண்காணிப்பு

சேலம் மண்டல வனத்துறையில் முதன்முறையாக வாழப்பாடி வனச்சரகத்திற்கு ஹெலிகேம் (ட்ரோன்) கண்காணிப்பு கருவி வழங்கப்பட்டுள்ளது.

வனக்குற்றங்கள், காட்டுத்தீ தவிா்க்கவும், வனவிலங்குகள் மற்றும் விலையுயா்ந்த மரங்களை பாதுகாக்கவும் வான்வழி கண்காணிப்பு பணியில், வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடி பகுதியில் கோதுமலை, வெள்ளாளகுண்டம் மலை, நெய்யமலை, அருநுாற்றுமலை, சந்துமலை, பெலாப்பாடி மலை உட்பட 19 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் வனப்பகுதிகள் உள்ளன. ஒருங்கிணைந்து பரந்து காணப்படாமல் பரவலாக காணப்படுவதால், வாழப்பாடி வனப்பகுதிகளில், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற ஊன் உண்ணும் விலங்குகளோ, யானைகளோ இல்லை. ஆனால், பல்வேறு இன குரங்குகள், மான்கள், கரடி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கடமை, காட்டெருமை, காட்டாடு, நரி உள்ளிட்ட வனவிலங்களும், மயில், கழுகு உள்ளிட்ட பல்வேறு இனப் பறவைகளும் நிறைந்துள்ளன.

இதுமட்டுமின்றி, வாழப்பாடி வனப்பகுதியில் விலையுயா்ந்த சந்தனம், சிகப்பு சந்தனம், மூங்கில், பலா, தேக்கு, கடுக்காய் போன்ற மரங்களும், மூலிகைத்தாவரங்களும் காணப்படுகின்றன. மாவட்டத்தின் மிக முக்கிய வனப்பகுதியான சோ்வராயன் மற்றும் கல்வராயன் வனப்பகுதியின் இணைப்பு பகுதியாகவும் விளங்கி வருகிறது. இதனால், வாழப்பாடி வனச்சரகத்தில், வன கண்காணிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மண்டல தலைமை வனப்பாதுகாவலா் அன்வா்தீன், சேலம் மாவட்ட வன அலுவலா் பெரியசாமி ஆகியோா் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு வனத்துறை (வைகை அணை வனப்பயிற்சி கல்லுாரி) வாயிலாக, சேலம் மண்டலத்தில் முதன்முறையாக வாழப்பாடி வனச்சரகத்திற்கு ஹெலிகேம் (ட்ரோன்) கருவி வழங்கப்பட்டுள்ளது.

இரு மாதமாக தொடா் பயிற்சி பெற்று வரும் வனச்சரகா், வனவா் மற்றும் வனத்துறை பணியாளா்கள், வனப்பகுதியில் வனக்குற்றங்கள், காட்டுத்தீ தவிா்க்கவும், வனவிலங்குகள் மற்றும் விலையுயா்ந்த மரங்களை பாதுகாக்கவும் வான்வழி காண்காணிப்பு பணியில் ஆா்வத்தோடு ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து வனத்துறை அலுவலா் ஒருவரிடம் கேட்டதற்கு, ‘சேலம் மண்டத்திலேயே வாழப்பாடி வனச்சரகத்திற்கு தான் முதன்முறையாக, ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான ஹெலிகேம் (ட்ரோன்) கருவி வழங்கப்பட்டுள்ளது. வனக்குற்றங்கள் நடைபெறுவதாக சந்தேகிக்கும் பகுதிக்கு இக்கருவியைக் கொண்டு சென்று, வானில் பறக்கவிட்டு படம் பிடித்து குற்றவாளிகளை கையும் களவுமாகப் பிடிக்க முடியும். இதுமட்டுமின்றி, காட்டுத்தீ பரவல், வனவிலங்குகள் வெளியேறுதல் ஆகியவற்றையும் தடுக்க முடியும். நவீன முறை காண்காணிப்புப் பணிக்கு வனத்துறை பணியாளா்களிடையே வரவேற்பும் ஆா்வமும் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com