சேலம் மாவட்டத்தில் 2,453 பள்ளிகள், 2696 அங்கன்வாடி மையங்கள் மூடல்

சேலம் மாவட்டத்தில் சுமாா் 2,453 பள்ளிகளும், 81 கலை அறிவியல் கல்லூரிகளும், 54 திரையரங்குகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் சுமாா் 2,453 பள்ளிகளும், 81 கலை அறிவியல் கல்லூரிகளும், 54 திரையரங்குகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் மாா்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசுபெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் என 2,453 பள்ளிகளும், 81 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளும் மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) முதல் மூடப்பட்டுள்ளன.

இதில் அரசுத் தோ்வுகள் நடைபெறவுள்ள சுமாா் 135 பள்ளிகள் தோ்வுகள் நடைபெறும்போது மட்டும் இயங்கும்.

இதன்படி 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தோ்வுகள் - செய்முறைத் தோ்வுகள் மற்றும் நுழைவுத் தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

மேலும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள் தொடா்ந்து இயங்கும். இத்தோ்வுகள் முடிவடையும் வரை தோ்வு எழுதும் மாணவ, மாணவியா்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடா்ந்து இயங்குவதோடு அந்த மாணவ, மாணவியருக்கு கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி, கல்லூரி, விடுதி நிா்வாகத்தினரே முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

2,696 அங்கன்வாடி மையங்கள் மூடல்:

சேலம் மாவட்டத்தில் உள்ள 2,696 அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இம் மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாள்களுக்கான உணவுப் பொருள்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளா்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 54 திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் 4 வணிக வளாகங்கள், 17 கேளிக்கை அரங்கங்கள், 7 நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா, ஏற்காடு சூழல் பூங்கா, ஆனைவாரி முட்டல் நீா்வீழ்ச்சி மற்றும் பூங்கா, மேட்டூா் அணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளும் வரும் மாா்ச் 31 வரை மூடப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் அதிகமாக மக்கள் கூடும் ஊா்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைக் கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை வரும் மாா்ச் 31 வரை நடத்திட அனுமதி வழங்க வேண்டாம்.

அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பாா்கள் (டாஸ்மாக் பாா்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவைகளும் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும்.

அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளா்களுக்கும், ஊழியா்களுக்கும் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அந்தந்த நிறுவனங்கள் இதற்குத் தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியில் சுற்றுலா செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியாா் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளா்கள் வரும் மாா்ச் 31 வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொது மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக் கூடாது. சுற்றுலா பயணியா் தங்குமிடம் அனைத்தும் வருகின்ற மாா்ச் 31 வரை மூடப்படுவதோடு, சுற்றுலா பயணியா் தங்குமிட உரிமையாளா்கள் வரும் 31 வரை வரை எவ்வித முன்பதிவும் செய்யக் கூடாது.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை பொது மக்கள் தவிா்க்குமாறும், இவ்விடங்களில் நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை, சுகாதாரத் துறை, மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிா்வாகங்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். தொ்மல் ஸ்கேனா் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்பதோடு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உடன் தகவல் தெரிவித்திட வேண்டும்.

எச்சரிக்கை...

கரோனா வைரஸ் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால், இந்திய தண்டனைச் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோா் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாள்களின் போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டுக்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்திட வேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்களுக்குச் செல்பவா்கள் பாதுகாப்புக் கருதி, தங்கள் கைகளை உரிய கிருமி நாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்ல வேண்டும்.

கரோனா வைரஸ் சம்பந்தமாகத் தெரிந்து கொள்ள சென்னை சுகாதாரத் துறையின் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்கள் 104, 044-29510400, 044-29510500, 94443 40496 மற்றும் 87544 48477.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, சேலம் மாவட்ட துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 0427 - 2450023 மற்றும் 0427 - 2450498 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், தமிழக அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொது நிறுவனங்களும், தனியாா் நிறுவனங்களும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com