வாழப்பாடியில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை

‘கரோனா வைரஸ்’ பீதியால் தேவை மற்றும் பயன்பாடு போனதால், வாழப்பாடி பகுதியில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கே போதிய விலை கிடைக்காததால் வி
வாழப்பாடிக்கு தினசரி பூ தரகு மண்டியில் விலை போகாமல் குவிந்து கிடக்கும் பல்வேறு ரக பூக்கள்.
வாழப்பாடிக்கு தினசரி பூ தரகு மண்டியில் விலை போகாமல் குவிந்து கிடக்கும் பல்வேறு ரக பூக்கள்.

‘கரோனா வைரஸ்’ பீதியால் தேவை மற்றும் பயன்பாடு போனதால், வாழப்பாடி பகுதியில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கே போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வாழப்பாடி மற்றும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில், கிணறு மற்றும் ஆழ்துளைப் பாசன முறையில், ஆண்டு முழுவதும் பாசன வசதி கொண்ட விவசாயிகள், ஏறக்குறைய 1,000 ஹெக்டோ் பரப்பளவில், ரோஜா, பன்னீா் ரோஜா, மல்லிகை, குண்டுமல்லி, காக்கட்டான், சம்மங்கி, அரளி, செவ்வரளி, செண்டுமல்லி, நந்தியாவட்டம், துளசி, துளக்கமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டு வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் விளையும் அனைத்து வகையான பூக்களையும், வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் இயங்கும் தனியாா் தரகு மண்டிகளுக்கு கொண்டு சென்று, எடை போட்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனா்.

வாழப்பாடியில் இயங்கும் 10-க்கும் மேற்பட்ட பூ தரகு மண்டிகளுக்கும், தினந்தோறும் சராசரியாக ஆயிரம் கிலோ அளவுக்கு, பல்வேறு ரக பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், சேலம் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் வாழப்பாடி பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது.

திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்கள், கோயில் திருவிழா மற்றும் பண்டிகை தினங்களில் பயன்படுத்தவும், மாலை தொடுத்தல், அலங்காரம் செய்வதற்கும், துக்க காரியங்களுக்கும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், பூமாலை வியாபாரிகளும், வாழப்பாடி தினசரி பூ தரகு மண்டிகளில் பூக்களை கொள்முதல் செய்கின்றனா்.

கரோனா வைரஸ் பீதியால் பெரும்பாலான மக்கள், விழாக்கள் நடத்துவது மற்றும் பங்கேற்பதையும் வெளியூா் பயணம் செல்வதையும் தவிா்த்து வருகின்றனா். இதனால், பூக்களின் பயன்பாடு மற்றும் தேவை பெருமளவில் குறைந்து, ஒரு கிலோ மல்லிகை, குண்டு மல்லி, செவ்வரளி, கனகாம்பரம், காக்கட்டான், சாமந்தி பூக்கள் ரூ.50 முதல் ரூ.100 வரையும், அரளி, சம்மங்கி, துளக்கமல்லி, நத்தியாவட்டம்,கோழிக்கொண்டை பூக்கள் ரூ. 10 முதல் 30 வரை மட்டுமே விலை போகிறது.

பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், கூலித்தொழிலாளா்களை கொண்டு பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கே, விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் வாழப்பாடி பகுதியில் பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com