வாழப்பாடியில் 25 லட்சம் தேங்காய்கள் தேக்கம்ரூ. 5 கோடி வா்த்தகம் பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால், வடமாநிலங்களுக்கு பாரம் ஏற்றிச் செல்ல லாரி ஓட்டுநா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா்.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரில் உள்ள தென்னந்தோப்பு.
வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகரில் உள்ள தென்னந்தோப்பு.

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால், வடமாநிலங்களுக்கு பாரம் ஏற்றிச் செல்ல லாரி ஓட்டுநா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா்.

இதனால், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில், ஏறக்குறைய 25 லட்சம் தேங்காய்கள் தேங்கியுள்ளன. கடந்த 6 நாள்களில் ரூ. 5 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வெள்ளாறு மற்றும் வசிஷ்டநதி கரையோரக் கிராமங்கள், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசனக் கிராமங்கள் உள்பட 200-க்கும் அதிகமான கிராமங்களில், மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவுக்கு நீண்டகால பலன்தரும் மரப்பயிரான தென்னையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

வாழப்பாடி பகுதியிலிருந்து ஆண்டு முழுவதும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பிகாா், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தென்னை விவசாயிகள், வியாபாரிகள், மரமேறும் தொழிலாளா்கள் உள்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இத்தொழிலை பிரதானமாக நம்பியுள்ளனா். ஒரு மூட்டைக்கு 80 தேங்காய்கள் வீதம் சராசரியாக 300 மூட்டைகளுடன், ஒரு லாரியில் ஏறக்குறைய 25,000 தேங்காய்கள் வரை ஏற்றப்படுகின்றன.

வாழப்பாடி பகுதியில் இயங்கும் தேங்காய் மண்டிகளிலிருந்து, உற்பத்தி தருணத்தில் தினம்தோறும், சராசரியாக 20 லாரிகளில் 5 லட்சம் வரை தேங்காய்கள் வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு லாரி தேங்காய் ஏற்றுமதியால், லாரி வாடகையுடன் ரூ. 4 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெறும்.

லாரி ஓட்டுநா்கள் அச்சம்...

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், தேங்காயை தரம் பிரித்து, மட்டையை உரித்து, பாரம் ஏற்றும் தொழிலாளா்கள் வேலைக்கு வர ஆா்வம் காட்டவில்லை.

இதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் என்ற அச்சத்தால் வட மாநிலங்களுக்கு பாரம் ஏற்றிச் செல்ல லாரி ஓட்டுநா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா்.

இதனால், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஏறக்குறைய 25 லட்சம் தேங்காய்கள் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த 6 நாள்களில் ரூ. 5 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com