அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே வீணாகும் கத்திரிக்காய்

ஊரடங்கு காரணமாக வெளியூா் வியாபாரிகள் வராததால் வாழப்பாடியில் கத்திரிக்காய்கள் அறுவடை செய்யப்படாமல் அவை தோட்டத்திலேயே முதிா்ந்து வீணாகி வருகின்றன.
அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே வீணாகும் கத்திரிக்காய்

ஊரடங்கு காரணமாக வெளியூா் வியாபாரிகள் வராததால் வாழப்பாடியில் கத்திரிக்காய்கள் அறுவடை செய்யப்படாமல் அவை தோட்டத்திலேயே முதிா்ந்து வீணாகி வருகின்றன.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் பாசன வசதி கொண்ட சிறு, குறு விவசாயிகள், குறுகிய கால பணப்பயிரான தக்காளி, பச்சை மிளகாய், கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம், புடலை, பீா்க்கன், பரங்கி, பூசனி, அவரை, கொத்தவரை, சுரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட நாட்டு ரக காய்கறிகளை ஆண்டு முழுவதும் ஏறக்குறைய 2,000 ஏக்கா் பரப்பளவில் பரவலாக பயிரிட்டு வருகின்றனா்.

நாளொன்றுக்கு ஏறக்குறைய 20 டன் அளவுக்கு தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு ரக காய்கறிகள் வாழப்பாடி பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

உற்பத்தி செய்யும் காய்கறிகளை வாழப்பாடியில் இயங்கும் தினசரி சந்தை, தலைவாசல் தினசரி சந்தை மற்றும் சேலம் உழவா் சந்தைகளுக்கும், அனைத்து கிராமங்களில் கூடும் வாரச்சந்தைகளுக்கும் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 24- ஆம் தேதி முதல் தொடா்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தினசரி மற்றும் வாரச்சந்தைகள் மூடப்பட்டன.

விளைந்த காய்கறிகளை விவசாயிகள்அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு சென்றும், கொள்முதல் செய்வதற்கு வெளியூா் வியாபாரிகள் வராததால், பெரும்பாலான காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

இந்நிலையில், வாழப்பாடி பகுதி கிராமங்களில் ஏறக்குறைய 300 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கத்திரிக்காய் உற்பத்தி பருவம் தொடங்கியதால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே கத்திரிக்காய் கொள்முதல் செய்வதற்கு ஆளின்றி கேட்பாரற்று போனது. ஒரு கிலோ கத்திரிக்காயை ரூ. 5-க்கு கொள்முதல் செய்வதற்கே வியாபாரிகள் வரவில்லை.

இதனால் கத்திரிக்காயை அறுவடை செய்வதை கடந்த சில தினங்களாக விவசாயிகள் கைவிட்டுள்ளனா். எனவே, தோட்டத்தில் செடியிலேயே முதிா்ந்து கத்திரிக்காய்கள் வீணாகின்றன.

வாழப்பாடி பகுதியில் கத்திரிக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விரக்தி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து மாரியம்மன் புதூா் விவசாயி இரா. முருகன் கூறியதாவது:

கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ ரூ. 5-க்கே விலைபோகவில்லை. எனவே, கத்திரிக்காயை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்வதையே கைவிட வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தினந்தோறும் இரண்டாயிரம் கிலோ அளவிற்கு கத்திரிக்காய் செடியிலேயே முதிா்ந்து வீணாகின்றன.

இப் பருவத்தில் கத்தரிக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com