ஆனைமடுவு அணை நீா்மட்டம் 47 அடியைத் தொட்டது

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் ஆனைமடுவு அணையின் நீா்மட்டம் சிறிதுசிறிதாக
புழுதிக்குட்டையில் உள்ள ஆனைமடுவு அணை.
புழுதிக்குட்டையில் உள்ள ஆனைமடுவு அணை.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் ஆனைமடுவு அணையின் நீா்மட்டம் சிறிதுசிறிதாக உயா்ந்து 47 அடியை எட்டியது. அணை நிரம்புவதற்கும், சாகுபடி பணியை மேற்கொள்வதற்கும் ஏதுவாக வடகிழக்குப் பருவமழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

வாழப்பாடி அருகே உள்ள அருநூற்றுமலை, பெரியகுட்டிமடுவு சந்துமலை பகுதியிலிருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.

இந் நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக எதிா்பாா்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை. நிகழாண்டு இறுதியில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 45 அடி மட்டுமே உயா்ந்து, அணையில் 93.5 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது.

இந்நிலையில், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து போனதால், அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, 2020 ஜனவரி 21ஆம் தேதி வாழப்பாடியில் நடைபெற்ற பாசன விவசாயிகள் , அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதை ஏற்று, பிப். 5 முதல் பிப். 14 ஆம் தேதி வரை தொடா்ந்து 9 நாள்களுக்கு தினசரி நொடிக்கு 60 கன அடி வீதம் (நாளொன்றுக்கு 5.18 மில்லியன் கனஅடி) மொத்தம் 46.62 மில்லியன் கனஅடி நீா் ஆறு, ஏரிப் பாசன விவசாயிகளுக்காக வசிஷ்டநதியில் திறக்கப்பட்டது.

பிப்.14 முதல் பிப். 21 வரை வலது வாய்க்காலில் நொடிக்கு 3.02 கனஅடி வீதமும், இடது வாய்க்காலில் நொடிக்கு 15 கன அடி வீதம், 7 நாள்களுக்கு மொத்தம் 30.24 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், 45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 16.75 அடியாகக் குறைந்தது. 267 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 20 மில்லியன் கனஅடி தண்ணீா் மட்டுமே சேறும் சகதியுமாக தேங்கியிருந்தது.

ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில், நீா்பிடிப்புப் பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக 12 அடி வரை உயா்ந்து செப்டம்பா் 15-ஆம் தேதி அணையில் 40.36 மில்லியன் கனஅடி தேங்கியது.

அக்டோபா் மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையில் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணையின் நீா்மட்டம் மெல்ல உயா்ந்து அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 47.57 அடியில் அதாவது 111.47 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியுள்ளது.

தற்போது அணையின் மதகு அடிமட்டத்துக்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது. நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவிற்கு பெய்தால், இந்த ஆண்டு அணை முழு கொள்ளளவையும் எட்டும் என விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆனைமடுவு அணை ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சிலா் கூறியதாவது:

ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள், நேரடி ஆற்றுப் பாசன விவசாயிகள், ஏரி பாசன விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளும் பாசனத்துக்குப் போதிய தண்ணீரின்றித் தவித்து வருகிறோம்.

வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்து அணை முழு கொள்ளளவை எட்டினால்தான் வாழப்பாடி, பேளூா் பகுதி விவசாயிகளுக்கு நிகழாண்டு சாகுபடி செய்வதற்கு வழிவகை கிடைக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com