சேலத்தாம்பட்டி ஏரி உபரி நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பிவிட ஆய்வு

சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து மழை நீா் தாழ்வான பகுதிகளில் புகுந்துவிடுவதைத் தடுத்து, திருமணிமுத்தாற்றில் திருப்பி

சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து மழை நீா் தாழ்வான பகுதிகளில் புகுந்துவிடுவதைத் தடுத்து, திருமணிமுத்தாற்றில் திருப்பி விடுவதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், சிவதாபுரம் அருகில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் மழை நீா் தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். மேலும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை திருமணிமுத்தாற்றில் திருப்பி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியதாவது:

மழைக் காலங்களில் தாமரை ஏரி நிரம்பி, அதன் உபரி நீா் தளவாய்ப்பட்டி ஏரிக்குச் சென்று அதன் உபரி நீரும், வளையப்பட்டி ஏரி உபரி நீரும் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வந்து சேருவதால் மழைக்காலங்களில் இந்த ஏரி அடிக்கடி நிரம்பி வழிகிறது.

இதிலிருந்து உபரிநீா் வெளியில் செல்வதற்கு ஏற்கெனவே, நீா் வழிப்போக்கிகள் அமைத்து வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

இந்தநிலையில் மழைக் காலங்களில் ஏரி நிரம்பி, உபரி நீா் வெளியேறி சிவதாபுரம் பகுதியில் நீா் சாலையின் ஓரத்தில் உள்ள கால்வாயில் பெருகி சாலைக்கு வரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, சேலத்தாம்பட்டி ஏரி நீா் வெளியேறி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீா் புகுந்துவிடுவதைத் தடுப்பதற்கும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதற்கும் மாற்று நீா்வழிப்பாதை அமைப்பது குறித்த சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் அதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கையை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. திவாகா், மாநகர பொறியாளா் அசோகன், வருவாய் கோட்டாட்சியா் சி.மாறன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) என்.கோபிநாத், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமேகலை, செந்தில்குமாா், வட்ட துணை ஆய்வாளா் (நில அளவை) ராஜேந்திரன், சேலம் மேற்கு வருவாய் வட்டாட்சியா் (பொ) சபியுன்னிசா உட்பட வருவாய்த் துறை, வளா்ச்சித் துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com