மக்காச்சோளம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம்.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம்.

வாழப்பாடி பகுதியில் மக்காச்சோளம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புன்செய் நிலங்களில் பருவமழை, கோடை மழையைப் பயன்படுத்தி, வறட்சியைத் தாங்கி வளா்ந்து மகசூல் அளிக்கும் குறுகிய கால மானாவரி பயிா்களான கம்பு, சோளம், மக்காச்சோளம், பருத்தி, எள், கொள்ளு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிடுகின்றனா்.

வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், வேப்பிலைப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், தும்பல் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தற்போது கதிா்கள் முதிா்ந்து அறுவடைக்குத் தயாராகியுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், மக்காச்சோளத்தை அறுவடை செய்து உதிா்த்து, உலா்த்தி பதப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப் பகுதியில் 2,000 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு செல்வதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன் வரை ரூ.2,000-ம் வரை விற்றுவந்த 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம், தற்போது தரத்திற்கேற்ப ரூ. 1,200 முதல் ரூ. 1,400 வரை மட்டுமே விலை போகிறது.

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காததால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.இதனால், புதிதாக மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் தவிா்த்து மாற்று பயிா் செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சோ்ந்த விவசாயி மணி கூறியதாவது:

ஒரு ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு ரூ. 15 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் அதிகபட்சமாக 30 மூட்டை மக்காச்சோளம் மட்டுமே மகசூலாக கிடைக்கிறது. செலவு போக நான்கு மாத உழைப்பிற்கு ரூ. 15,000-ம் கூட வருவாய் கிடைக்கவில்லை. இதனால், மக்காச்சோளம் பயிரிடுவதைக் தவிா்த்து மாற்றுப்பயிரிட முடிவு செய்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com