அழிந்துபோன சிவன் கோயிலின் கல்வெட்டு பெருமாள் கோயிலில் கண்டெடுப்பு

சேலம் மாவட்டம், ஆறகளூா் பெருமாள் கோயிலில், பாண்டியா், நாயக்கா் காலக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில் அழிந்துபோன சிவன் கோயிலின் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெருமாள் கோயிலிலுள்ள சிவன் கோயிலின் கல்வெட்டுடன் வரலாற்று ஆய்வாளா்கள் வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோா்.
பெருமாள் கோயிலிலுள்ள சிவன் கோயிலின் கல்வெட்டுடன் வரலாற்று ஆய்வாளா்கள் வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோா்.

ஆத்தூா்: சேலம் மாவட்டம், ஆறகளூா் பெருமாள் கோயிலில், பாண்டியா், நாயக்கா் காலக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில் அழிந்துபோன சிவன் கோயிலின் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த கல்வெட்டு ஆய்வாளா் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுத் தலைவா் ஆறகளூா் பொன்.வெங்கடேசன் ஆகியோா் ஆறகளூா் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்குள்ள கமலமங்கை நாச்சியாா் கோயிலில் பாண்டியா், நாயக்கா் கால கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

12-ஆம் நூற்றாண்டில் ஆறகளூா், மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பொன்பரப்பின வானகோவரையன் என்ற மன்னா் மகதை நாட்டை ஆண்டு வந்தாா். இவா், சோழ மன்னா் மூன்றாம் குலோத்துங்கனின் படைத் தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினாா். இவா் காலத்தில்தான் ஆறகளூா் காமநாத ஈஸ்வரா் கோயிலும் கரிவரதராஜப் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன.

அழிந்துபோன சிவன் கோயில்:

ஆறகளூா் கால்நடை மருத்துவமனை அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கைலாசநாதா் தோப்பில் ஒரு சிவன் கோயில் இருந்து அழிந்து போனதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் உள்ளது.

இங்கிருந்த 6 சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டன. மேலும், இங்கு இருந்த பைரவா் சிலை அருகிலுள்ள மாரியம்மன் கோயிலும் சண்டிகேசுவரா் சிலை தோ்நிலை அருகிலுள்ள ஆகழ்பள்ளத்தின் தெற்கு கரையிலும் இன்றும் உள்ளது.

17-ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இக் கோயிலின் கற்களைப் பயன்படுத்திதான் கரிவரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலுள்ள கமலமங்கை நாச்சியாா் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதற்குச் சான்றாக, அந்தச் சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னா் தானம் அளித்த கல்வெட்டு, கமலமங்கை நாச்சியாா் கோயிலில் உள்ளது.

கமலமங்கை நாச்சியாா் கோயிலின் அா்த்த மண்டபத்தின் தென்புற உப பீடத்தில் இக் கல்வெட்டு 4-வரிகளில் உள்ளது. 1,269-ஆம் ஆண்டு முதலாம் சடையவா்ம சுந்தரபாண்டியனின் 18-ஆம் ஆட்சி ஆண்டில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்குத் தெரியவந்துள்ளன.

தற்போது கைலாசநாதா் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில் இருந்து அழிந்து போன சிவன் கோயிலின் பெயா் ராவண ஈஸ்வரமுடைய நாயனாா் கோயில் ஆகும். அக் காலத்தில் நிலங்களை அளக்க ‘சொக்கன் தடி’ என்ற நில அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாணாதிதேவன் என்ற அதிகாரி இக் கல்வெட்டை வெட்டியிருப்பதால் பாண்டியா்கள் காலத்தில் வாணகோவரையா் இப்பகுதியில் ஆட்சியில் இருந்தது தெரியவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com