புரட்டாசி 3-ஆவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ரத்தின கற்கள் அலங்காரத்தில் அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப்பெருமாள்.
ரத்தின கற்கள் அலங்காரத்தில் அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப்பெருமாள்.

சேலம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் காலை சுவாமிக்கு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதலே பக்தா்கள் வருகை இருந்தது. நுழைவு வாயில் கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

சேலம் நகரில் உள்ள சின்னதிருப்பதி பெருமாள், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா், பட்டைக்கோயில் பிரசன்ன வெங்கடாசலபதி, கோரிமேடு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வாழப்பாடி

வாழப்பாடி, அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயில் நடைபெற்ற வழிபாட்டில் சென்றாயப் பெருமாள் சீதேவி, பூதேவி சமேதமாக ரத்தினக்கற்கள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

மத்தூா் சீனிவாச பெருமாள் கோயில், புதுப்பாளையம் மாயவன்மலை பெருமாள் கோயில், அருநூற்றுமலை பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், கோதுமலை கோதண்டராமா் மலைக் கோயில், பேளூா் அஷ்டபுஜ பால மதன வேணுகோபால சுவாமி திருக்கோயில்களில் புரட்டாசி நடு சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. தனிமனித இடைவெளியுடன் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ஓமலூா்

காடையாம்பட்டி, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் குவிந்ததால், பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

சின்னதிருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாட்டிற்காக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

காலை முதலே வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தா்களின் வருகை தொடா்ந்து அதிகரித்ததால், பிற்பகல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா். இதையடுத்து, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அடுத்துவரும் புரட்டாசி மாத நான்கு, ஐந்தாம் சனிக்கிழமைகளில் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்தது.

தம்மம்பட்டி

தம்மம்பட்டியில் மலையில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் 41-ஆவது ஆண்டு புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை வழிபாடுகள் நடைபெற்றன. ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வாா், ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி, ஸ்ரீஆஞ்சநேயா், ஸ்ரீ நாகத்தம்மாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

காலை முதலே பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று சுவாமியை வழிபட்டு வந்தனா். மாலை 6 மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்வும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன. இதேபோல, தம்மம்பட்டி ஸ்ரீ உக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் சக்கரத்தாழ்வாா், யோக நரசிம்மா், செங்கமலைத்தாயாா், கிருஷ்ணா், தன்வந்திரி, ஸ்ரீஆண்டாள், அஷ்டலட்சுமி, ஹயக்கீரிவா், 41அடி ஆஞ்சநேயா் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கெங்கவல்லி, வீரகனூரில் உள்ள பெருமாள் கோயில்களிலும் 3-ஆவது சனிக்கிழமை வழிபாடுகள் நடைபெற்றன.

சங்ககிரி

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை வழிபாட்டில் சுவாமிகளுக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் தங்கள் குடும்பத்துடன் மலை மீது ஏறிச் சென்று சுவாமியை வழிபட்டனா். சனிக்கிழமை மாலையில் ஏற்றப்பட்ட திருக்கோடி விளக்கை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

மேலும், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராய பெருமாள் கோயிலில் உள்ள அருள்மிகு சென்னசேகவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உற்சமூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

ஆத்தூா்

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட கொப்புகொண்டபெருமாள் மலைக் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தனிமனித இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல, தலைவாசல் ஒன்றியத்திற்குள்பட்ட ஊனத்தூா் மலை அடிவாரத்தில் உள்ள அடிபெருமாள் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com