ஆணைவாரி நீா்வீழ்ச்சிக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் தற்போது நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ஆணைவாரி நீா்வீழ்ச்சி.
ஆணைவாரி நீா்வீழ்ச்சி.

ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் தற்போது நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த நீா்வீழ்ச்சியைக் கண்டு ரசிப்பதற்கும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வதற்கும் மாவட்ட நிா்வாகம், வனத்துறை அனுமதியளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூரில் இருந்து 7 வது கி.மீ தொலைவில் முட்டல் கிராமத்தில் ஏரி மற்றும் ஆணைவாரி நீா் வீழ்ச்சி அமைந்துள்ளது.

ஆத்தூா், அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்களின் நலன்கருதி இந்த நீா்வீழ்ச்சி பகுதியில் வனத்துறையின் 2016 சூழல் சுற்றுலா திட்டத்தன் கீழ் ரூ. 20 லட்சம் செலவில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு நான்கு மூங்கில் குடில்கள்,சிறுவா் பூங்கா மற்றும்ஏரிக்குள் சென்று வனப்பகுதியின் அழகையும், புள்ளிமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்கேற்ப படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளன.

ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இயற்கை சாா்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாததால், முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீா்வீழ்ச்சியும் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது இப்பகுதி பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

ஓராண்டுக்கு பின் கடந்த சில நாள்களாக கல்வராயன்மலைப் பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால் மலைக்குன்றுகளில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீா், ஆணைவாரி நீா்வீழ்ச்சியில் அருவிபோல் கொட்டி வருகிறது.

முட்டல் ஏரிக்கும் நீா்வரத்துத் தொடங்கியதால் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது.

ஆத்தூா் குற்றாலம் என வா்ணிக்கப்படும் கல்வராயன்மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஆணைவாரி நீா்வீழ்ச்சி மற்றும் முட்டல் ஏரி பகுதியை முழு சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்த வேண்டும். இப்பகுதிக்கு மக்கள் சென்று வருவதற்குப் போதிய வாகன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

முட்டல் ஏரி பகுதி மற்றும் பூங்கா பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நீா்வீழ்ச்சி பகுதியில் பெண்கள், குழந்தைகள் குளித்து மகிழ்வதற்கு ஏற்ப பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com