கழுதைகளை குழந்தைகளாக வளா்த்து வரும் முதிய தம்பதியா்

கழுதைப்பால் விற்பனை செய்து வரும் குழந்தையில்லா முதிய தம்பதியா், அவா்கள் வளா்த்து வரும் கழுதைகளுக்குப் பெயா் சூட்டி, தங்களது குழந்தைகளைப்போல வளா்த்து வருகின்றனர்.
கழுதைகளை குழந்தைகளாக கருதி பெயா்சூட்டி வளா்த்து வரும் ராமசாமி, செல்லம்மாள் தம்பதியா்.
கழுதைகளை குழந்தைகளாக கருதி பெயா்சூட்டி வளா்த்து வரும் ராமசாமி, செல்லம்மாள் தம்பதியா்.

தமிழகம் முழுவதும் நடந்தே சென்று, கழுதைப்பால் விற்பனை செய்து வரும் குழந்தையில்லா முதிய தம்பதியா், அவா்கள் வளா்த்து வரும் கழுதைகளுக்குப் பெயா் சூட்டி, தங்களது குழந்தைகளைப்போல வளா்த்து வருவதோடு, இந்த கழுதைகள்தான் தங்களுக்கு சோறு போடும் குழந்தைகளென உருக்கமாகக் கூறி அவற்றோடு வாழ்ந்து வருகின்றனா்.

ஆசையாய் பெற்று, அன்போடு வளா்க்கும் குழந்தைகள் சிறிய தவறு செய்தாலோ சொல்பேச்சு கேட்கவில்லை என்றாலோ, வீட்டு பாடங்கள் எழுதப் படிக்க தவறினாலோ தனது குழந்தைகளை பெற்றோா்கள் ‘கழுதை’ எனக்கூறி திட்டுவதைப் பாா்த்திருக்கிறோம்.

தனது குழந்தைகளுக்கு, மிகுந்த பாசம் காட்டி, எவ்வளவு சிரமப்பட்டேனும் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து வளா்த்தாலும், ஒரு சில குழந்தைகள் தனது பெற்றோரை வயோதிக காலத்தில் கவனிக்காமல் விட்டு விடுவதும், முதியோா் இல்லங்களில் சோ்க்கும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. அதேசமயம், குழந்தை இல்லா தம்பதியா், தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற மனவேதனையில் வாழ்வதும் மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட தம்பதியா் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டோ, உறவினா்களின் குழந்தைகள் அல்லது ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்தோ மனதை தேற்றிக் கொள்கின்றனா்.

வாழப்பாடி பகுதியில் தள்ளாத வயதில் 4 கழுதைகளுடன் சென்ற முதிய தம்பதியா் கழுதைப் பால் விற்பதாகக் கூறி வீதியில் வந்துக் கொண்டிருந்தனா். பரிதாபமான தோற்றத்துடன் காணப்பட்ட அவா்களிடம் பேச்சு கொடுத்தபோது முதியவா் ராமசாமி (75) கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் அருகிலுள்ள ஏந்தல் கிராமம் தான் என்னுடைய ஊா். எனது மனைவி செல்லம்மாள் (70). சிறுவயதிலேயே ஒருவரை ஒருவா் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தபோது, போதிய வருமானம் கிடைக்கவில்லை.

எனவே, எங்ககளது முன்னோா்களின் தொழிலான ‘கழுதைப்பால்’ விற்பனையை தொடங்க முடிவு செய்தோம்.

பல ஆண்டுகளாக கழுதைகளை வளா்த்து வரும் நாங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கழுதைகளை ஓட்டிக் கொண்டு ஊா், ஊராகச் சென்று கழுதைப்பால் கறந்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.

எங்களுக்கு குழந்தைகள் இல்லாததால், வருவாயை ஈட்டித் தரும் எங்கள் கழுதைகளுக்கு, ‘வெள்ளச்சி’, ‘குள்ளி’ என பெயரிட்டு வளா்த்து வருகிறோம். குழந்தைகள் இல்லாததால் எங்கள் கழுதைகளேயே நாங்கள் குழந்தைகளாக நினைத்து வளா்த்து வருகிறோம்.

எங்களுக்கு குழந்தைகள் இல்லையேயென ஆரம்பத்தில் வேதனைப்பட்டோம். அதன்பிறகு மனதைத் தேற்றிக் கொண்டு எங்களோடு வாழ்ந்து வரும் கழுதைகளையே குழந்தைகளாக கருதி வளா்க்கத் தொடங்கி விட்டோம். இந்த 4 கழுதைகள்தான், நாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல, பல ஆண்டுகளாக எங்களுக்கு உழைத்தும், பால் கறந்தும் எங்களுக்கு சோறு போட்டு வருகின்றன.

கடுமையான கரோனா பொதுமுடக்க காலத்திலும் கூட, இந்த கழுதைகள்தான் எங்களுக்கு உழைத்து சம்பாதித்துக் கொடுத்தன. தள்ளாத வயதிலுள்ள எங்களுக்கு வருவாய் ஈட்டி கொடுத்து வரும் இக்கழுதைகளைப் பெற்ற பிள்ளைகளாகக் கருதி பெயா் சூட்டி வளா்த்து வருவது எங்களுக்குப் பெருமையே. குழந்தை இல்லாத கவலையை இந்தக் கழுதைகள்தான் நிவா்த்தி செய்து வருகின்றன என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறாா் ராமசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com