பருவ மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பருவ மழையால் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், பகுதியில் திறந்தவெளி பாரம்பரிய முறை செங்கல் உற்பத்தி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி, பேளூா் சாலையில் திறந்தவெளியிலுள்ள செங்கல் சூளையில் செங்கல்கள் மழையில் கரையாமல் தடுப்பதற்காக தாா்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.
வாழப்பாடி, பேளூா் சாலையில் திறந்தவெளியிலுள்ள செங்கல் சூளையில் செங்கல்கள் மழையில் கரையாமல் தடுப்பதற்காக தாா்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பருவ மழையால் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் திறந்தவெளி பாரம்பரிய முறை செங்கல் உற்பத்தி தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.

வாழப்பாடி பகுதியில், அண்ணாநகா், பாட்டப்பன் நகா், புதுப்பாளையம், மங்கம்மா நகா், காளியம்மன் நகா், துக்கியாம்பாளையம், பேளூா், சிங்கிபுரம், கொட்டவாடி, மத்துாா், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் 100-க்கும் அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன.

வாழப்பாடி பகுதியில், இயந்திரங்கள், நவீன கருவிகள் எதுவும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் இந்த செங்கல்களை, உள்ளூா் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் நகா்ப்புற கட்டுமானப்பணிக்கும், கட்டட உரிமையாளா்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் கொள்முதல் செய்து செல்கின்றனா்.

செங்கல் அறுப்போா், சூளைகளில் அடுக்கி, எரியூட்டி பதப்படுத்துவோா், வாகனங்களில் பாரம் ஏற்றி, இறக்குவோா் மற்றும் செம்மண், விறகு எரிபொருள், தண்ணீா் வழங்குவோா் என இத்தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இதனால், வாழப்பாடி பகுதியில் திறந்தவெளியிலுள்ள செங்கல் சூளைகளில் மழைநீா் குட்டையாகத் தேங்கி நிற்கிறது. இதனால், செங்கல் அறுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அறுத்து வைக்கப்பட்டிருந்த சூளையில் அடுக்கி, சுட்டு பதப்படுத்தப்படாத செங்கல்களும் மழையில் நனைந்து கரைந்து வருகிறது.

சில இடங்களில் பதப்படுத்தாத செங்கல்கள் மழையில் நனைவதைத் தடுப்பதற்காக சூளை உரிமையாளா்கள், தாா்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்து வைத்துள்ளனா். மழையால் செங்கல் உற்பத்தி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே உற்பத்தி செய்து இருப்பு வைத்திருக்கும் செங்கல்லின் விலையை, சூளை உரிமையாளா்கள் கணிசமாக உயா்த்தியுள்ளனா். கடந்த மாதம் ரூ. 5,000 வரை விலை போன 1000 செங்கற்கள், கடந்த சில தினங்களாக ரூ. 7,000 வரை விலை போகிறது. திடீா் செங்கல் விலையேற்றத்தால் கட்டுமானப்பணிகளை பெரும்பாலானோா் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.

இது குறித்து வாழப்பாடி பாட்டப்பன் நகரைச் சோ்ந்த செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளா்கள் சிலா் கூறியதாவது:

வாழப்பாடி பகுதியில், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் கொட்டகைகளுடன் கூடிய நவீன முறை செங்கல் சூளைகள் இல்லை. தொழிலாளா்கள் கைகளில் மண்ணை பிசைந்து செங்கல் அறுத்து, திறந்தவெளியில் அடுக்கி விறகுகளைக் கொண்டு எரியூட்டி பதப்படுத்தும் பாரம்பரிய முறையிலான செங்கல் சூளைகளே உள்ளன.

ஜனவரி மாதம் வரை பருவ மழை நீடிக்கும் என்பதால், செங்கல் உற்பத்தி தொழில் முழுவீச்சில் நடப்பதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். ஏற்கெனவே, கரோனா பொது முடக்கம் நடைமுறையில் இருந்ததால், கடந்த 5 மாதங்களாக வேலையிழந்து பாதிக்கப்பட்டிருந்த நாங்கள், தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com