கரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை
By DIN | Published On : 18th September 2020 08:14 AM | Last Updated : 18th September 2020 08:14 AM | அ+அ அ- |

கரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு வியாழக்கிழமை சேலத்தில் தெரிவித்தாா்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவக் கல்வி இயக்குநா் மருத்துவா் ஆா்.நாராயணபாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா பிரிவில் மருத்துவா்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா். இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமாா் 450 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 செவிலியா்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களை 20 சதவீத அளவுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியா்கள் விரும்பினால் அரசு மருத்துவமனையில் சேவை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும்.
அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை அளிக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது 1.6 சதவீதமாக இறப்பு விகிதம் உள்ளது. இதனை 1 சதவீதமாக குறைக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 16,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் தொட்டி உள்ளது. மேலும் கூடுதலாக 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் தொட்டி அமைக்கப்பட உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுபவா்களில் சுமாா் 90 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்புகின்றனா். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு போதிய சிகிச்சை அளித்து வருகிறோம்.
தனியாா் மருத்துவமனைகளில் இருந்து கடைசி நேரத்தில் நோயாளிகளை அனுப்பக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். இரவு நேரங்களைத் தவிா்த்து, முன்கூட்டியே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்போது அவா்களுக்கு போதிய சிகிச்சை கிடைக்கும். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படிப்படியாக பிளாஸ்மா சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
ஆய்வின்போது அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் ஆா்.பாலாஜிநாதன், கண்காணிப்பாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.