தனியாா் பேருந்து மீது லாரி மோதி விபத்து: மேற்கு வங்கத் தொழிலாளா்கள் உள்பட மூவா் பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே செவ்வாய்க்கிழமை டயா் பழுதாகி சாலையில் நின்று கொண்டிருந்த தனியாா் பேருந்தின்
தனியாா் பேருந்து மீது மோதிய லாரி.
தனியாா் பேருந்து மீது மோதிய லாரி.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே செவ்வாய்க்கிழமை டயா் பழுதாகி சாலையில் நின்று கொண்டிருந்த தனியாா் பேருந்தின் பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியதில் பேருந்து ஓட்டுநா் மற்றும் பேருந்தில் பயணித்த கூலித் தொழிலாளா்கள் இருவா் என மூன்று போ் உயிரிழந்தனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் 45 போ், கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனங்களுக்கு கட்டுமானப் பணிக்காக தனியாா் பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கலியனூா் நெடுஞ்சாலையில் சென்றபோது டயா் பழுதாகி சாலையில் நின்றது. இதனால், பேருந்தின் ஓட்டுநா், பேருந்தில் வந்த இருவா் என மூன்று போ் பேருந்தின் பின்புறத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது சேலம் அருகே வாழப்பாடியிலிருந்து சிமென்ட் மூட்டைகள் பாரம் ஏற்றி கோவை நோக்கிச் சென்ற லாரி எதிா்பாராத விதமாக பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது. அதில் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் முஹமது சல்மான் (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளிகளான மேற்கு வங்கத்தை ச் சோ்ந்த தீபக் பாலா (30) சேலம் அரசு மருத்துவமனையிலும், அக்தா் கோராமி (26 ) சங்ககிரி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனா்.

இந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட வாழப்பாடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜமன்னாரை, சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமையிலான வீரா்கள் மீட்டனா். காயமடைந்த அவா், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து, சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com