வசிஷ்ட நதியை தூய்மைப்படுத்த சிறப்புத் திட்டம்: மூன்று பேரூராட்சிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஆய்வு

வரலாற்று சிறப்புமிக்க வசிஷ்டநதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து புனிதம் காக்கும் நோக்கில், சேலம் மாவட்டத்தில்
வி.எஸ்.01: பேளூரில் கழிவுநீா்த் தேங்கி புதா்மண்டி கிடக்கும் வசிஷ்ட நதி.
வி.எஸ்.01: பேளூரில் கழிவுநீா்த் தேங்கி புதா்மண்டி கிடக்கும் வசிஷ்ட நதி.

வரலாற்று சிறப்புமிக்க வசிஷ்டநதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து புனிதம் காக்கும் நோக்கில், சேலம் மாவட்டத்தில் பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முழு வீச்சில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த அருநுாற்றுமலை, பெரியகுட்டிமடுவு, புங்கமடுவு பகுதியில் வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.

ராமன் தாகம் தீா்க்க வசிஷ்டா் அருளிய புனித நதியாக நம்பப்படும் இந்த நதி, ராமாயணம் உள்ளிட்ட புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு நதியாக விளங்குகிறது.

புழுதிக்குட்டையிலிருந்து குறிச்சி, கோணஞ்செட்டியூா் வழியாக வசிஷ்டநதி பேளூரை கடந்ததும் 13-ஆவது கி.மீ துாரத்தில், கல்வராயன் மலைப்பகுதி நீரோடைகள் சங்கமித்து பாப்பநாயக்கன்பட்டியில் உற்பத்தியாகி 22 கி.மீ., துாரத்திலிருந்து வரும் கரியகோவில் வெள்ளாறு இணைகிறது. இதனையடுத்து, படையாச்சியூா், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்துாா், தலைவாசல் வழியாக, சேலம் மாவட்ட எல்லைக்குள் ஏறக்குறைய 85 கி.மீ., துாரம் பயணிக்கும் வசிஷ்டநதி, கொல்லிமலையில் உற்பத்தியாகி தம்மம்பட்டி, கெங்கவல்லி வழியாக வழிந்தோடி வரும் ஸ்வேதா நதியுடன் இணைந்து கடலுாா் மாவட்டத்திற்குள் நுழைகிறது.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில் உற்பத்தியாகி ஏறக்குறைய 208 கி.மீ., துாரத்திற்கு பாய்ந்து செல்லும் வசிஷ்டநதி, பல்வேறு கிளையாறுகளுடன் இணைந்து இறுதியாக வெள்ளாறு என்ற பெயரோடு கடலுாா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே வங்கக்கடலில் கலக்கிறது.

புனித நதியாகக் கருதப்படும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க வசிஷ்ட நதியில் வழிநெடுக குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு செய்யப்படாத ஒட்டுமொத்த கழிவுநீரும் நேரடியாகக் கலந்து வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், தேசிய அளவில் அசுத்த நதிகளில் ஒன்றாக வசிஷ்டநதியும் பட்டியலில் இடம் பெற்றது.

இதுகுறித்து தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளேடுகளில் படத்துடன் விரிவான செய்திகள் கடந்தாண்டு வெளியானது.

இதனையடுத்து, வரலாற்று சிறப்புமிக்க வசிஷ்டநதியில் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீா் நேரடியாக கலப்பதை தடுத்து, இந்நதியின் புனிதம் காக்கும் நோக்கில், சேலம் மாவட்டத்தில், பேளூா், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் நோக்கில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வசிஷ்ட நதிக்கு வரும் கழிவுநீா் மற்றும் கழிவுநீா் நச்சுத்தன்மை விகிதம், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடவசதி மற்றும் இதர சாத்தியக்கூறுகள் குறித்து பேரூராட்சிகள் துறை மாவட்ட உயரதிகாரிகள், பொறியாளா்கள் ஆகியோா் தொடா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

வசிஷ்ட நதியில் நேரடியாக கழிவுநீா் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு திட்ட முன்வரைவு மற்றும் திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதால், வெகுவிரைவில் இத்திட்டம் செயல் வடிவம் பெறுகிறது. இதனால், வசிஷ்டநதி கரையோரப் பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com