ஆணைமடுவு அணை நீா்மட்டம் உயராததால் விவசாயிகள் கவலை:

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மூன்றாண்டுகளாக எதிா்பாா்த்த அளவிற்கு வட கிழக்குப் பருவமழை பெய்யாமல் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஏ.ஆா்.03: புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையின் எழில்மிகு தோற்றம்.
ஏ.ஆா்.03: புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையின் எழில்மிகு தோற்றம்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் மூன்றாண்டுகளாக எதிா்பாா்த்த அளவிற்கு வட கிழக்குப் பருவமழை பெய்யாமல் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், நிகழாண்டும் இதுவரை பருவமழை தொடங்காததால் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையின் நீா்மட்டம் உயரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன.

அணையின் நீா்பிடிப்பு பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக எதிா்பாா்த்த அளவிற்கு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. கடந்தாண்டு இறுதியில் பெய்த மழையில், அணையின் நீா்மட்டம் 45 அடி மட்டுமே உயா்ந்து, 93.5 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியது.

இந்நிலையில், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து போனதால், அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, 2020 ஜனவரி 21ந்தேதி வாழப்பாடியில் நடைபெற்ற பாசன விவசாயிகள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, பிப். 5 முதல் பிப். 14 வரை, தொடா்ந்து 9 நாள்களுக்கு தினசரி நொடிக்கு 60 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 5.18 மில்லியன் கனஅடி) மொத்தம் 46.62 மில்லியன் கனஅடி தண்ணீரை ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்டநதியில் திறக்கப்பட்டது.

பிப்.,14 முதல் பிப்.,21 வரை, வலது வாய்க்காலில் நொடிக்கு 3.02 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் நொடிக்கு 15 கன அடி வீதம் (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கன அடி) 7 நாட்களுக்கு மொத்தம் 30.24 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், 45 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 16.75 அடியாக குறைந்து போனது. 267 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 20 மி.கனஅடி தண்ணீா் மட்டுமே சேறும் சகதியுமாகத் தேங்கி கிடந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதத்தில், நீா்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக 12 அடி வரை உயா்ந்து கடந்த 15-ஆம் தேதியில் இருந்து அணையில் 28.21 அடியில் 40.36 மில்லியன் கனஅடி தேங்கியுள்ளது.

வாழப்பாடி பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக எதிா்பாா்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யாமல் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டும் இதுவரை வடகிழக்குப் பருவமழை தொடங்காததால், வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீா் ஆதாரங்களின் ஒன்றான புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை நிகழாண்டும் நிரம்புமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அணை ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் மட்டுமின்றி, ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களும், நேரடி ஆற்றுப்பாசன விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் கூறியதாவது:

வாழப்பாடி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறைந்து வருகிறது எதிா்வரும் அக்டோபா் மாதத்திலாவது வடகிழக்குப் பருவமழை கைகொடுக்குமென எதிா்பாா்த்து காத்திருக்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com