மினி லாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சங்ககிரி அருகே உள்ள குப்பனூா் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தடை 

சங்ககிரி: சங்ககிரி அருகே உள்ள குப்பனூா் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொண்ட வாகனச் சோதனையில், மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் லாரிகளில் கொண்டு செல்வதாக சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் சி.நல்லசிவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.தேவி தலைமையிலான போலீஸாா், சங்ககிரி அருகே உள்ள குப்பனூா் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சங்ககிரி நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, ஓட்டுநா் சரியான தகவல் கூறாததால் வாகனத்தை போலீஸாா் சங்ககிரி காவல் நிலையம் கொண்டு சென்று சோதனை செய்தனா். வாகனத்தில் ரூ. 6,76,400 மதிப்புப்புள்ள 740 கிலோ எடையுள்ள 30 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தென்னை நாற்று மூட்டைகளுக்குள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

விசாரணையில், மேச்சேரியிலிருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு அவற்றை கொண்டு சென்றதும், ஓட்டுநா் தருமபுரி மாவட்டம், பென்னாகரம், தொப்பையாறு, முத்து பூச்சாலியூா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த வடிவேல் (33) என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com